Breaking News
“பொய்யான குற்றச்சாட்டுக்கு நான் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும்” மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் தங்கமணி பதிலடி

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் நேற்று ஆய்வு செய்த மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காற்றாலை மின்சாரத்தில் ஊழல் நடந்து இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும், மீண்டும் தவறான பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அது காற்றாலை மின்சாரம் கிடையாது. நவம்பர், டிசம்பரில் காற்றாலை மின்சாரம் முழுமையாக உற்பத்தியாகாது என்பதை அவர் நினைவில் கொள்ளவில்லை. அவர் கொடுத்து உள்ள அறிக்கை என்னிடமும் உள்ளது. இதை கண்டுபிடித்ததே தமிழ்நாடு மின்சார வாரியம்தான். நெல்லை பகுதியை சேர்ந்த தணிக்கை அதிகாரிகள் தான் கண்டுபிடித்தார்கள்.

தூத்துக்குடியில் உள்ள இந்த் பாரத் என்னும் நிறுவனம் சென்னை மற்றும் ஈரோட்டில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு மின்சாரத்தை விற்பனை செய்து இருக்கிறார்கள். அவர்கள் மின்சாரம் உற்பத்தி செய்யாமலே தொகையை பெற்றுக்கொண்டனர்.

மேற்படி நிறுவனங்களுக்கு நமது அனல் மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் சென்று உள்ளது. இதனால் அந்த பணம் மின்சார வாரியத்துக்கு வரவேண்டிய பணம். இதனை கண்டுபிடித்து வழக்கு தொடுத்து, 3 அதிகாரிகளை பணி நீக்கம் செய்து உள்ளோம். எதிர்க்கட்சி தலைவர் நேற்று மாலையில் மீண்டும் பேட்டி கொடுத்து உள்ளார். மனசாட்சியை அடகு வைத்துவிட்டு பேசுவதாகவும், ஜமக்காளத்தில் வடிகட்டிய பொய் என்றும் கூறி உள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர், நேற்று கொடுத்த அறிக்கையில் எங்கு காற்றாலை மின்சாரத்துக்கு நாங்கள் பணம் கொடுத்து இருப்பதாக உள்ளது என்பதை சொல்லுங்கள். எந்த காற்றாலை நிறுவனத்துக்கு பணம் கொடுத்து உள்ளோம் என்பதை அவரிடமே கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். மின்சார வாரியத்துக்கு வரவேண்டிய தொகையை தர வேண்டும் என்று நாங்கள் தான் நோட்டீஸ் அனுப்பி உள்ளோம்.

தவறான தகவலை தெரிவித்துக்கொண்டு இருக்கிறார். யாரோ கொடுத்த அறிக்கையை, பார்க்காமல் மீண்டும், மீண்டும் சொல்லிக்கொண்டு இருக்கிறார். அவர் ஒரு கட்சியின் தலைவராக இருக்கும் காரணத்தால் எடுத்த காரியத்தில் பின்வாங்கினால் கட்சிக்கும், எதிர்க்கட்சி தலைவருக்கும் அழகல்ல என்பதால், பிடித்த வாதத்திலேயே இருக்கிறார்.

பொய்யான குற்றச்சாட்டுக்கு நான் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும். மின்சார வாரியத்தில் இருந்து காற்றாலைக்கு பணம் கொடுத்து இருந்தால், ராஜினாமா செய்யுங்கள் என்று சொல்லலாம். ஆனால் நாங்கள் பணம் கொடுக்கவே இல்லை.

எங்களுக்குத்தான் பணம் வர வேண்டும். மின்சார வாரியம் ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. ரூ.9 கோடியே 17 லட்சத்துக்கு 22 சதவீதம் வட்டியுடன், ரூ.11 கோடியே 78 லட்சத்தை இந்த் பாரத் நிறுவனம், மின்சார வாரியத்துக்கு தர வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பி, உயர்நீதிமன்றத்தில் தடையாணை பெற்று வழக்கு நடந்து கொண்டு இருக்கிறது.

அதனை புரிந்து கொள்ளாமல் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். தி.மு.க. ஆட்சியிலும் இதே போன்ற நிலை இருந்தது. அதுவும் கோர்ட்டில் வழக்கு நடந்து கொண்டு இருக்கிறது. அதை நான் தவறு என்று சொல்லவில்லை. அவர்கள்தான் வேண்டுமென்றே குற்றம் சாட்டுகிறார்கள்.

பொதுவாக எனக்கு ஒன்று தோன்றுகிறது. இந்த காற்றாலைகளை அதிகம் வைத்து இருப்பது மேற்கு மண்டலத்தை சேர்ந்த தொழில் அதிபர்கள்தான். மேற்கு மண்டலத்தில் தி.மு.க. எப்போதும் வெற்றி பெற முடியாமல் உள்ளது. அந்த கோபத்தை வெளிப்படுத்துவதற்காக, காற்றாலை அதிபர்கள் மீது கோபத்தை திருப்புகிறார் என்றுதான் நினைக்கிறேன்.

ஒரு பெரிய கட்சியின் தலைவராக இருக்கிறார். எடுத்த காரியத்தில் பின்வாங்கக் கூடாது என்பதற்காகவும், பொய்யை திரும்ப திரும்ப சொன்னால் உண்மையாகி விடும் என்ற அடிப்படையிலும் அவர் கூறி வருகிறார். நானும் விளக்கம் கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறேன்.

தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் தற்போது 1 லட்சத்து 2 ஆயிரம் டன் நிலக்கரி கையிருப்பு உள்ளது. மின்தேவை குறைந்து இருப்பதால், 5 மின் உற்பத்தி எந்திரங்களில் ஒரு எந்திரம் மட்டும் நிறுத்தப்பட்டு உள்ளது.

இன்று (நேற்று) காலையில் சூரியஒளி மின்சாரம் 1,400 மெகாவாட், நீர் மின்சாரம் 2 ஆயிரம் மெகாவாட், காற்றாலை மூலம் 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது. இந்த நிலையில் அனல் மின்நிலையம் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான தேவை இல்லாத காரணத்தால், உற்பத்தி எந்திரங்களை நிறுத்தி வைத்து உள்ளோம். தேவைப்படும்போது முழு உற்பத்தியை தொடங்குவோம்.

5 மின் உற்பத்தி எந்திரங்களிலும் முழு உற்பத்தி நடந்தால் ஒரு நாளைக்கு 16 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படும். ஆகையால் தற்போது, 6 நாட்கள் வரை மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான நிலக்கரி கையிருப்பில் உள்ளது. வருகிற 25-ந் தேதி மேலும் ஒரு நிலக்கரி கப்பல் வர உள்ளது.

தமிழ்நாட்டில் எந்த அனல் மின்நிலையத்திலும் நிலக்கரி தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடம் இல்லை.

ஒடிசா, மேற்கு வங்கத்தில் இருந்து நிலக்கரி வந்து கொண்டு இருக்கிறது. தூத்துக்குடி அனல் மின்நிலையத்துக்கு வெளிநாட்டில் இருந்து 6 லட்சம் டன் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட உள்ளது. அக்டோபர் மாதம் 2-வது வாரத்தில் இந்த நிலக்கரி வந்து சேரும்.

தமிழ்நாட்டில் 2022-க்குள் 4 ஆயிரம் மெகாவாட் திறன் கொண்ட புதிய அனல் மின்நிலையங்களை கொண்டு வருவோம். உடன்குடி, வடசென்னை, எண்ணூர் ஆகிய இடங்களில் இந்த அனல் மின்நிலையங்கள் அமைக்கப்படும். அதற்கான பணிகள் நடந்து வருகிறது. தேவை என்றால் தூத்துக்குடி அனல்மின்நிலையமும் புதுப்பிக்கப்படும். தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் கடல்நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. மழைநீரை சேகரிப்பதற்கான தொட்டி கட்டப்பட்டு வருகிறது. தூத்துக்குடி அனல்மின்நிலையம் பழுது நீக்கப்பட்டு புதிய அனல் மின்நிலையம் போன்று சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

மின்சார வாரியத்தில் உள்ள 800 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக அண்ணா பல்கலைக்கழகம் மூலம் தேர்வு நடத்தப்பட உள்ளது. அங்கு கவுன்சிலிங் நடந்ததால், தேர்வு நடத்துவதில் தாமதம் ஏற்பட்டது. அடுத்த மாதம் தேர்வு நடத்தப்பட்டு, ஒளிவுமறைவு இல்லாமல் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.