கருணாஸ் எம்.எல்.ஏ.வை உடனடியாக கைதுசெய்ய வேண்டும் பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை
நாடார் சமுதாயத்தை இழிவாக பேசிய சிரிப்பு நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ.வை கண்டித்து பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் மாநில பொருளாளர் புழல் தர்மராஜ் தலைமையில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு நாடார் அமைப்பை சேர்ந்தவர்களும் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் எம்.ஆர்.சிவகுமார், செய்தி தொடர்பாளர் ஜி.சந்தானம், தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்துரமேஷ் நாடார், நாடார் மக்கள் சக்தி ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார், சென்னை புறநகர் நாடார் பாதுகாப்பு பேரவை தலைவர் கொளத்தூர் த.ரவி, ஒருங்கிணைப்பாளர் செ.அருணாசலமூர்த்தி, நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மின்னல் ஸ்டீபன், பொதுச்செயலாளர் சுந்தரேசன், பல்லாவரம் வட்டார நாடார் ஐக்கிய சங்க செயலாளர் ஆர்.ஜெயபாண்டியன் நாடார், சென்னைவாழ் நாடார் உறவுமுறை சங்கத் தலைவர் எம்.ஏ.கே.ராஜேந்திரன், செயலாளர் தங்கராஜ், பொருளாளர் சந்தனகுமார், பொழிச்சலூர் நாடார் சங்க தலைவர் எஸ்.ஜி.சுந்தர்ராஜன், மாங்காடு சுற்றுவட்டார ஐக்கிய நாடார் சங்க தலைவர் எஸ்.ராமன் உள்பட பல்வேறு நாடார் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது புழல் தர்மராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தயவால் எம்.எல்.ஏ.வாகிய சிரிப்பு நடிகர் கருணாஸ் வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழக முதல்-அமைச்சர், போலீஸ் அதிகாரி, பத்திரிகைகள், கவுண்டர் மற்றும் நாடார் சமுதாயங்களை இழிவான வார்த்தைகளால் பேசி அவதூறு செய்துள்ளார்.
நான் நினைத்தால் எதையும் செய்வேன். என்னிடம் எல்லா வல்லமையும் இருக்கிறது. என்னை பார்த்து முதல்-அமைச்சரே பயப்படுகிறார். போலீஸ் அதிகாரிகள் சட்டையை கழற்றிவிட்டு என்னோடு மோத முடியுமா? என்கிறார். கருணாசை கைது செய்ய முதல்-அமைச்சர் பயப்படுவது ஏன்? அவர் யார் பின்னணியில் இருக்கிறார்?
சான்றோர் குலத்தை சார்ந்த நாங்கள் காமராஜர் வழியை பின்பற்றி ஜனநாயகத்துக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம். சட்டத்தை மதித்து தொழில் செய்து, அதிகமான வரியை இந்த நாட்டுக்கு கொடுக்கிறோம். நாங்கள் கேட்டுக்கொள்வது என்னவென்றால் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நடிகர் கருணாசை உடனடியாக கைதுசெய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.