கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்வதே இலக்கு – இந்திய வீரர் ஜடேஜா
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் துபாயில் நடந்த சூப்பர்-4 சுற்றில் வங்காளதேசத்தை 173 ரன்னில் சுருட்டிய இந்திய அணி அந்த இலக்கை 36.2 ஓவர்களில் எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. 29 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்த இந்திய சுழற்பந்து வீச்சாளர் 29 வயதான ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகன் விருது பெற்றார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஏறக்குறைய 480 நாட்களுக்கு பிறகு இந்திய ஒரு நாள் போட்டி அணிக்கு திரும்பி சாதித்து இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த மறுபிரவேசம் எப்போதும் மனதில் நிலைத்து நிற்கும். இதற்கு முன்பு அணியில் இடம் கிடைக்காமல் இவ்வளவு இடைவெளி விழுந்ததில்லை. நான் யாருக்காகவும் எதையும் நிரூபிக்க வேண்டியது அவசியம் கிடையாது. என்னிடம் என்ன திறமை இருக்கிறதோ? அதில் சாதுர்யமாக இருந்தால் போதும்.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு இன்னும் சில காலம் உள்ளது. அதற்கு முன்பாக நிறைய போட்டிகளில் விளையாட உள்ளோம். அதனால் உலக கோப்பை அணியில் இடம் கிடைக்குமா? என்பது குறித்து இப்போது கருத்து எதுவும் சொல்ல முடியாது. வாய்ப்பு கிடைக்கும் ஆட்டங்களில் எல்லாம் தற்போது செயல்பட்டது போல் எனது திறமையை காட்ட வேண்டும் என்பது மட்டுமே எனது லட்சியமாகும்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் கூட கடந்த சில வெளிநாட்டு தொடர்களில் அணியில் எனக்கு நிலையான இடம் கிடைக்கவில்லை. எனவே வாய்ப்பு கிடைத்தால் அதை கெட்டியாக பிடித்துக் கொள்ள வேண்டும் என்ற மனஉறுதியுடன் இருந்தேன். எனது தனிப்பட்ட ஆட்டத்தில் முன்னேற்றம் காண்பதில் தொடர்ந்து கவனம் செலுத்துகிறேன்.
துபாய் போன்ற வேகம் குறைந்த ஆடுகளத்தில் பவுலர்கள் இன்னும் கடின முயற்சியை வெளிப்படுத்தியாக வேண்டும். வழக்கமான ஆடுகளத்தில் பந்து களத்தில் ‘பிட்ச்’ ஆனதும் வேகமாக எகிறி செல்லும். பேட்ஸ்மேன்கள் அதை துரிதமாக கணிப்பது கடினமாக இருக்கும். ஆனால் இங்கு பவுலர்கள் ரொம்ப தீவிரமாக செயல்பட வேண்டி இருக்கிறது. இந்த ஆட்டத்தில் குல்தீப் யாதவும், யுஸ்வேந்திர சாஹலும் சிறப்பாக பந்து வீசினர். ஆனால் அதிர்ஷ்டவசமாக மறுமுனையில் எனக்கு விக்கெட்டுகள் கிடைத்தது. பந்து வீச்சு மட்டுமின்றி பேட்டிங்கிலும் முத்திரை பதிக்க முயற்சிப்பேன்.
விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடிக்கொண்டிருந்த எனக்கு, இந்திய ஒரு நாள் போட்டியில் விளையாட அழைப்பு வரும் என்று தெரியாது. தேர்வாளர் என்னை தொடர்பு கொண்டு, நீங்கள் துபாய்க்கு செல்ல வேண்டி இருக்கலாம். தயாராக இருங்கள் என்று கூறினார். துரதிர்ஷ்டவசமாக அக்ஷர் பட்டேல் காயத்தில் சிக்கியதால் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. நானும் அந்த வாய்ப்பில் நன்றாக விளையாடி இருக்கிறேன். இவ்வாறு ஜடேஜா கூறினார்.