நிலக்கரி தட்டுப்பாடு எதிரொலி: தமிழகத்தில் மின்தடையை போக்க கைகொடுக்கும் காற்றாலைகள்
தமிழகத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரை 3 மாதங்கள் காற்றாலை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. சில ஆண்டுகளில் இந்த 3 மாதங்களை தாண்டியும் காற்றாலைகள் மின்சார உற்பத்தியில் ஈடுபடுவது வழக்கம். தமிழகம் முழுவதும் சுமார் 14 ஆயிரம் காற்றாலைகள் மூலம், தினமும் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் மெகாவாட் வரை மின்உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
காற்றாலைகளின் மின்சார உற்பத்தி நடைபெறும் காலங்களில் அனல் மின்நிலையங்கள் பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்படுவது வழக்கம். அதேபோல் நடப்பாண்டும் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், திடீரென காற்றாலை மூலம் பெறப்பட்டு வந்த மின்சாரமும் நிறுத்தப்பட்டு விட்டது. அனல் மின் நிலையங்களையும் உடனடியாக இயக்க முடியவில்லை.
அனல்மின் நிலையங்களில் நிலக்கரியும் போதுமான அளவு கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆங்காங்கே மின்தடை ஏற்பட்டுள்ளது. மின்சார வாரியமும் போர்க்கால அடிப்படையில் மின் தடையை ஓரளவு போக்கி வருகின்றன.
தமிழக அரசு சார்பில், மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து வடமாநிலங்களில் இருந்து நிலக்கரி கொண்டுவரப்பட்டு அனல் மின்நிலையங்களில் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டு உற்பத்தியும் அதிகரிக்கப்பட்டது.
இந்த நிலையில் சீசன் நிறைவடைந்த காற்றாலைகளும் தற்போது மின்சார உற்பத்தியில் ஈடுபட்டு உள்ளன. இதனால் ஒரு நாளைக்கு சராசரியாக 4 ஆயிரம் மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும், மின்தடையை போக்க காற்றாலைகளும் ஓரளவு கைகொடுத்து வருகின்றன.
இதனால் அனல்மின் நிலையங்களில் மின்சார உற்பத்தியும் குறைக்கப்பட்டு உள்ளது. தற்போது 11 ஆயிரத்து 500 முதல் 12 ஆயிரம் மெகாவாட் வரை மின்சார தேவையும் குறைந்து உள்ளது.
மேற்கண்ட தகவல்களை மின்சார வாரியம் மற்றும் எரிசக்தி துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.