அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டுக்கு டிரம்ப் பரிந்துரைத்த நீதிபதி மீது மீண்டும் பாலியல் புகார்
அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டுக்கு புதிய நீதிபதியாக, நியூயார்க் பகுதியை சேர்ந்த பிரட் கவனாக்கின் பெயரை ஜனாதிபதி டிரம்ப் பரிந்துரைத்தார். இவரை செனட் உறுப்பினர்கள் ஓட்டுப்போட்டு தேர்வு செய்ய இருந்த நேரத்தில், அவர் மீது பாலியல் புகார்கள் எழுந்துள்ளன. எனவே இந்த ஓட்டெடுப்பு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
இதில் வெளிப்படையாக அளித்த கிறிஸ்டின் பிளாசி போர்டு என்ற பெண்ணின் புகாரை செனட் நீதிக்கமிட்டி 27-ந்தேதி விசாரிக்கிறது. இதில் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் நீதிபதி கவனாக் ஆகியோரிடம் தனித்தனியாக விசாரித்து முடிவு எடுக்கப்படுகிறது.
இந்த புகார் ஏற்படுத்திய அதிர்ச்சி மறைவதற்குள் நீதிபதி கவனாக் மீது தற்போது மற்றொரு பெண்ணும் பாலியல் புகார் கூறியுள்ளார். அதாவது 1983-ல் ஏல் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டு இருந்த காலத்தில், நீதிபதி கவனாக் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தெபோரா ராமிரெஸ் (53) என்ற பெண் புகார் கூறியுள்ளார்.
ஆனால் இந்த குற்றச்சாட்டை நீதிபதி கவனாக் மறுத்துள்ளார். தனது புகழுக்கு களங்கம் ஏற்படுத்தவே இதுபோன்ற பாலியல் புகார்கள் கடைசி நேரத்தில் கிளம்புவதாக அவர் குற்றம் சாட்டி உள்ளார். சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக டிரம்ப் பரிந்துரைத்த நபர் மீது அடுக்கடுக்காக பாலியல் புகார்கள் குவிந்து வருவது அமெரிக்க நீதித்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.