ஆசிய கோப்பை கிரிக்கெட் தோல்வி எதிரொலி: இலங்கை அணியின் கேப்டன் மேத்யூஸ் நீக்கம்
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி சந்தித்த மோசமான தோல்வியை தொடர்ந்து கேப்டன் பதவியில் இருந்து மேத்யூஸ் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய கேப்டனாக சன்டிமால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக மேத்யூஸ் 2013-ம் ஆண்டு முதல் இருந்து வந்தார். ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் தொடரில் உள்ளூரில் இலங்கை அணி தோல்வியை சந்தித்ததை தொடர்ந்து 2017-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் அவர் கேப்டன் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார். பின்னர் அவர் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் மீண்டும் ஒருநாள் மற்றும் 20 ஓவர் அணியின் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் 14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் லீக் ஆட்டத்தில் 137 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேசத்திடமும், 91 ரன் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானிடமும் தோல்வி கண்டு இலங்கை அணி முதல் சுற்றிலேயே வெளியேறியது. இந்த தோல்வியை அடுத்து இலங்கை அணி மீது கடும் விமர்சனம் எழுந்தது.
இதைத் தொடர்ந்து இலங்கை கிரிக்கெட் வாரிய தேர்வு குழுவினர் கூடி கேப்டன் பதவியில் இருந்து மேத்யூசை உடனடியாக விலகும்படி வற்புறுத்தினர். இதனை அடுத்து கேப்டன் பதவியில் இருந்து மேத்யூஸ் விலகி இருக்கிறார். ஒருநாள் மற்றும் 20 ஓவர் அணியின் புதிய கேப்டனாக டெஸ்ட் கேப்டன் தினேஷ் சன்டிமால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதிய கேப்டனாக சன்டிமால் நியமிக்கப்பட்டு இருப்பதை இலங்கை கிரிக்கெட் வாரியம் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
அடுத்த மாதம் (அக்டோபர்) முதல் இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒருநாள், ஒரே ஒரு 20 ஓவர் மற்றும் 3 டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடுகிறது. இந்த போட்டி தொடருக்கான இலங்கை அணியின் கேப்டனாக சன்டிமால் செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதால் வேதனை அடைந்து இருக்கும் மேத்யூஸ், இலங்கை கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரிக்கு கடிதம் எழுதி இருக்கிறார். அதில், ‘இலங்கை அணியின் தோல்வியால் ஏற்பட்டுள்ள பழியை ஏற்க நான் தயார். அதேநேரத்தில் என் மீது மட்டும் தனியாக பழியை சுமத்துவதில் என்ன நியாயம் இருக்கிறது. தேர்வாளர்கள் மற்றும் பயிற்சியாளரிடம் ஆலோசித்து தான் எல்லா முடிவுகளும் எடுக்கப்பட்டன. அப்படி இருக்க என்னை மட்டும் பலிகடாவாக்கி இருப்பது அர்த்தமற்றது. இலங்கை அணிக்கு ஒருபோதும் பாரமாக இருக்க நான் விரும்பியது கிடையாது. நான் இலங்கை அணிக்கு விளையாட தகுதி படைத்தவன் இல்லை என்று நீங்கள் கருதினால் ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டியில் இருந்து விடைபெறவும் நான் தயார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.