கருணாஸ் எம்.எல்.ஏ. ஜாமீன் கோரி மனு தாக்கல் காவலில் வைத்து விசாரிக்க போலீசார் கோரிக்கை
முதல்-அமைச்சர், போலீஸ் அதிகாரிக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக கைது செய்யப்பட்ட கருணாஸ் எம்.எல்.ஏ. ஜாமீன் கோரி எழும்பூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதேவேளையில் அவரை, ஒரு வாரம் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று போலீசார் தரப்பில் கோரிக்கை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவரான கருணாஸ் எம்.எல்.ஏ., கடந்த 16-ந் தேதி சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன்னை கண்டு அஞ்சுவதாகவும், போலீஸ் அதிகாரி ஒருவர் காக்கிச்சட்டையை கழற்றி விட்டு நேருக்கு நேர் மோதி பார்க்குமாறு சவால் விடுத்தும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தை பற்றி இழிவாகவும் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
கருணாஸ் பேசிய வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் பரவியது. இதையடுத்து முதல்-அமைச்சர், போலீஸ் அதிகாரியை அவதூறாக பேசியதாக கருணாஸ் மீது 8 பிரிவுகளின் கீழ் நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நேற்று முன்தினம் அதிகாலை சாலிகிராமம் சத்தியமூர்த்தி தெருவில் உள்ள அவரது வீட்டில் வைத்து கருணாசை போலீசார் கைது செய்தனர். இதன்பின்னர், எழும்பூர் மாஜிஸ்திரேட்டு உத்தரவுப்படி வேலூர் சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.
இந்தநிலையில் கருணாஸ் எம்.எல்.ஏ., ஜாமீன் கோரி எழும்பூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வருகிறது.
அதேவேளையில், கருணாசை ஒரு வாரம் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று நுங்கம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் எழும்பூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து கருணாசிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டியது இருப்பதாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
இதற்கிடையே கருணாசை விடுதலை செய்யக்கோரி நந்தனம் தேவர் சிலை அருகே முக்குலத்தோர் புலிப்படையைச் சேர்ந்தவர்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 56 பேரை போலீசார் கைது செய்தனர்.