ஆளுநருடன் எச்.ராஜா திடீர் சந்திப்பு: தமிழக அரசு மீது புகார் கூறியதாக தகவல்
ஆளுநர் பன்வாரிலால் புரோ ஹித்தை பாஜக தேசியச் செய லாளர் எச்.ராஜா நேற்று திடீரென சந்தித்துப் பேசினார். சுமார் 30 நிமிடங்கள் நடந்த சந்திப்பின்போது தமிழக அரசு மீது எச்.ராஜா புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்ற எச்.ராஜா, காவல் துறையையும் நீதிமன்றத் தையும் கடும் வார்த்தைகளால் விமர்சித்ததாக பெரும் சர்ச்சை எழுந்தது. எச்.ராஜாவை கைது செய்ய வேண்டும் என திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் எச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்த சென்னை உயர் நீதிமன்றம், 4 வாரங்களுக்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு எச்.ராஜாவுக்கு உத்தரவிட்டது.
இதற்கிடையே, திண்டுக்கல் மாவட்டத்தில் பேசும்போது, அற நிலையத் துறை ஊழியர்கள் குறித்து எச்.ராஜா அவதூறாகப் பேசியதாக தமிழகம் முழுவதும் பல இடங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தை விமர்சித்ததாக தாமாக முன்வந்து விசாரிக்க தலைமை நீதிபதிக்கு மட்டுமே அதிகாரம் உண்டு என எச்.ராஜா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று முறையீடு செய்யப்பட்டது.
இந்தச் சூழலில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை எச்.ராஜா சந்தித்து பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக எச்.ராஜாவுக்கு நெருக்கமானவர்களிடம் கேட்ட போது, ”விநாயகர் சதுர்த்தி விழா வுக்கு தமிழக அரசு பல்வேறு தடைகளை ஏற்படுத்தியது. செங் கோட்டை, வந்தவாசி உள்ளிட்ட இடங்களில் வன்முறை வெடித்தது. இந்து அமைப்புகளைச் சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாமிரபரணி புஷ்கர விழாவுக்கும் தமிழக அரசு சில இடங்களில் தடை விதித்து நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஆளுநரிடம் எச்.ராஜா புகார் தெரிவித்தார்” என்றனர்.திருமயத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்ற எச்.ராஜா, காவல் துறையையும் நீதிமன்றத்தையும் கடும் வார்த்தைகளால் விமர்சித்ததாக பெரும் சர்ச்சை எழுந்தது.