கிறிஸ்டியானோ ரொனால்டோ, மெஸ்சி ஆதிக்கத்தை தகர்த்து உலகின் சிறந்த கால்பந்து வீரராக லூகா மோட்ரிச் தேர்வு
கிறிஸ்டியானோ ரொனால்டோ, மெஸ்சி ஆகியோரின் ஆதிக்கத்தை தகர்த்து உலகின் சிறந்த கால்பந்து வீரராக குரோஷியா அணியின் கேப்டன் லூகா மோட்ரிச் தேர்வானார்.
சிறந்த கால்பந்து வீரர் விருது
சர்வதேச கால்பந்து சங்கம் (பிபா) சார்பில் ஆண்டுதோறும் சிறந்த வீரர், வீராங்கனை தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டு வருகிறது. தேசிய கால்பந்து அணிகளின் கேப்டன்கள், பயிற்சியாளர்கள், மீடியா பிரதிநிதிகள் மற்றும் ஆன்லைன் மூலம் ரசிகர்கள் போடும் ஓட்டு மூலம் விருதுக்குரிய நபர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இந்த ஆண்டுக்கான உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருதுக்கான இறுதிப்பட்டியலில் குரோஷியா அணியின் கேப்டன் லூகா மோட்ரிச், போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, எகிப்து அணியின் முன்னணி வீரர் முகமது சலா ஆகியோர் இடம் பிடித்து இருந்தனர். விருது யாருக்கு என்பதில் இவர்கள் இடையே கடும் போட்டி நிலவியது.
லூகா மோட்ரிச் தேர்வு
இந்த நிலையில் உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருது வழங்கும் விழா இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. 29.05 சதவீதம் வாக்குகளை பெற்ற குரோஷியா அணியின் கேப்டன் லூகா மோட்ரிச் உலகின் சிறந்த வீரர் விருதுக்கு முதல்முறையாக தேர்வானார். கிறிஸ்டியானோ ரொனால்டோ 19.08 சதவீதம் வாக்குகளுடன் 2–வது இடத்தையும், முகமது சலா 11.23 சதவீத வாக்குகள் பெற்று 3–வது இடத்தையும் பெற்றனர். அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி 9.81 சதவீதம் வாக்குகள் பெற்று 5–வது இடத்துக்கு தள்ளப்பட்டார். கடந்த 12 ஆண்டுகளில் சிறந்த வீரர் விருதுக்கான இறுதிப்பட்டியலில் (டாப்–3) மெஸ்சி இடம் பிடிக்காமல் போனது இதுவே முதல்முறையாகும்.
2007–ம் ஆண்டுக்கு பிறகு உலகின் சிறந்த வீரர் விருதை கிறிஸ்டியானோ ரொனால்டோவும், லயோனல் மெஸ்சியும் மாறி, மாறி பெற்று வந்தனர். அவர்கள் இருவரின் 10 ஆண்டு கால ஆதிக்கத்தை லூகா மோட்ரிச் தகர்த்தார்.
உலக கோப்பை போட்டியில் அசத்தியவர்
33 வயதான லூகா மோட்ரிச், ரஷியாவில் கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதம் நடந்த உலக கோப்பை கால்பந்து போட்டியில் குரோஷியா அணிக்கு தலைமை தாங்கியதுடன், முதல்முறையாக அந்த அணியை இறுதிப்போட்டி வரை முன்னேற வைத்து அசத்தினார். அத்துடன் உலக கோப்பை போட்டி தொடரில் சிறந்த வீரருக்கான தங்க பந்தையும் அவர் தட்டிச் சென்றார். ரியல் மாட்ரிட் கிளப் அணிக்காகவும் விளையாடி வரும் லூகா மோட்ரிச் சாம்பியன்ஸ் லீக் போட்டியில் மெச்சத் தகுந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். விருது வழங்கும் விழாவில் கிறிஸ்டியானோ ரொனால்டோ, மெஸ்சி ஆகியோர் பங்கேற்கவில்லை.
விருது பெற்ற லூகா மோட்ரிச் பேசுகையில், ‘அற்புதமான கோப்பையுடன் இந்த மேடையில் நிற்பதை மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறேன். இந்த விருது எனக்குரியது மட்டுமல்ல. ரியல் மாட்ரிட் மற்றும் குரோஷியா அணி வீரர்களுக்கும் இந்த விருது சாரும். எனது பயிற்சியாளர்கள் இல்லாவிட்டால் எனக்கு இந்த விருது கிடைத்து இருக்காது. அத்துடன் எனது குடும்பத்தினர் ஆதரவு இல்லாவிட்டால் நான் வீரராக உருவாகி இருக்க முடியாது. இந்த தருணத்தில் எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்’ என்று தெரிவித்தார்.
சிறந்த வீராங்கனை
உலகின் சிறந்த கால்பந்து வீராங்கனை விருதை 32 வயதான பிரேசில் அணியை சேர்ந்த மார்தா பெற்றார். அவர் இந்த விருதை 6–வது முறையாக பெற்றுள்ளார்.