திருமுருகன் காந்தி உயிருக்கு ஆபத்து தமிழக அரசு மீது வைகோ குற்றச்சாட்டு
*தியாக தீபம் திலீபன் நினைவு நாளில் வைகோ சூளுரை;*
திருமுருகன் காந்தி உயிருக்கு ஆபத்து
தமிழக அரசு மீது வைகோ குற்றச்சாட்டு
*சுதந்திரத் தமிழ் ஈழமே எங்கள் இலக்கு; தியாக தீபம் திலீபன் நினைவு நாளில் தமிழ் ஈழம் மலர்ந்திட சூளுரைப்போம்.*
என் அன்புக்குரிய செய்தியாளர்களே, தொலைக்காட்சி ஊடக நண்பர்களே,
இந்த நாள் ஈழத்தமிழருடைய இரத்தத்தால், கண்ணீரால் எழுதப்பட்ட வரலாற்றில் தியாகச் சுடர் திலீபனுடைய உயிர்ச் சுடர் அணைந்துபோன நாள். கணைக்கால் இரும்பொறையைப் போல துளி நீரும் பருகாமல், 12 நாட்கள் நல்லூர் கந்தசாமி கோயில் எதிரே இருக்கக்கூடிய மைதானத்தில் இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் கண்ணீர் சிந்தி கதறி அழ, “திலீபன் அழைப்பது சாவையா? இந்தச் சின்ன வயதில் இது தேவையா?” என்ற உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனுடைய சோகக் குரல் உயர்ந்து எழ, சிறுகச் சிறுக அந்த உயிர்ச் சுடர் அணைந்துகொண்டே வந்தது. சுதந்திரத் தமிழ் ஈழ இலட்சியத்துக்காக தன் உயிரை திலீபன் நீத்தாரோ அந்தக் கனவை நனவாhக்க, உலக வரலாற்றில் தேசியத் தலைவர் பிரபாகரனைப் போல எந்த நாட்டின் உதவியும் இல்லாமல் முப்படை அணிகளை உருவாக்கி, ஆயுதப் புரட்சியை உருவாக்கியவர் எவருமே கிடையாது என்ற கீர்த்திக்குரிய தலைவர்.
நான் நெஞ்சால் பூஜிக்கும் தலைவர் பிரபாகரன் அவர்களுடைய கனவுகளை நனவாக்க இந்தத் தியாகத் திருநாளில், திலீபன் நினைவு நாளில் சுடரை ஏற்றி, மலர்கள் தூவி வணங்கி, சூளுரை மேற்கொண்டு இருக்கின்றோம்.
இன்றைக்கு இந்தியாவில் மிகக் கொடூரமான ஒரு சூழ்நிலை உருவாகி இருக்கின்றது. சிந்தனையாளர்கள் உயிர்களுக்குப் பாதுகாப்பு இல்லை. மதச்சார்பின்மைக் கொள்கையைச் சொல்லுகின்ற கோவிந்த் பன்சாரே, நரேந்திர தபோல்கர், கல்புர்கி, கௌரி லங்கேஷ் ஆகியோர் இந்துத்துவா சக்திகளால் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். நீதி இல்லை.
ஒரே நாடு; ஒரே மதம்; ஒரே கட்சி என்ற கோரமான இலக்கை முன்வைத்து, இந்தியாவின் பன்முகத்தன்மையைச் சிதைத்து, ஜனநாயகத்தின் உயிர்க் கருவை அழித்து, மதச்சார்பின்மையைத் தகர்த்து பல்வேறு சமய நம்பிக்கை உள்ளவர்களின் நல்லிணக்கத்தைச் சிதைத்து, இரத்தக் களறிகளை ஏற்படுத்த வேண்டும் என்ற கொடிய நோக்கத்தோடு, இந்துத்துவா சக்திகளின் பின்னணியில் மத்தியில் ஆளுகிற அரசு செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது.
அதனுடைய விளைவுதான் இந்தியாவுக்கு சமூக நீதி வெளிச்சத்தைத் தந்த பெரியாருடைய சிலை சென்னை, திருச்சி, ஒரத்தநாடு, தாராபுரத்தில் அவமதிக்கப்படுகிறது. இதற்கு முழுக்க முழுக்கக் காரணம் பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயளலார் ராஜாதான். ஏன் அவரைக் கைது செய்யவில்லை? கர்ணாஸ் பொது அமைதிக்கு விரோதமாகப் பேசினார் என்று கைது செய்து சிறையில் அடைத்த இந்த அரசும், காவல்துறையும் எச்.ராஜாவின் பக்கம் ஏன் நெருங்கவில்லை? கோடிக்கணக்கான தமிழர்கள் நெஞ்சில் வேதனைத் தழல் எழுவதற்குக் காரணமான பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதற்குக் காரணமான குற்றவாளி ராஜாதான். அதாவது அம்பை ஏவியவர்கள்தான் குற்றவாளிகள். அந்த அம்பை ஏவியவர் அவர்தான் என்பது அனைவருக்கும் தெரியும்.
ராஜ்பவனுக்குச் சென்று பன்வாரிலால் புரோகித் அவர்களைச் சந்திக்கிறார். காவல்துறை பாதுகாப்போடு மேடையில் பேசுகிறார். ஒப்புக்கு வழக்குப் பதிவு செய்திருக்கிறோம் என்று சொல்கிறார்கள்.
தூத்துக்குடியில் நடைபெற்றது கோரப் படுகொலை; இந்த அரசு ஒரு கொலைகார அரசு. ஸ்டெர்லைட்டை எதிர்த்து இலட்சக்கணக்கான மக்கள் தாங்களாக வந்தபோது, ஸ்னோலின் என்கிற 11 ஆம் வகுப்பு படிக்கின்ற மாணவி இது அக்கிரம் அல்லவா? என்று கேட்ட மாத்திரத்தில் அவர் முகத்தைப் பார்த்துச் சுட்டதால், துப்பாக்கிக் குண்டு வாய் வழி நுழைந்து தலையின் பின்புற வழியாக வெளியேறி தலைவெடித்துச் சிதறி இறந்துபோனார். ஜான்சி என்கின்ற ஒரு சகோதரி வீட்டுக்கு உணவு கொண்டுபோகிறபோது சுட்டுக் கொன்றார்கள். இந்தப் பதிமூன்று பேர் படுகொலை ஜாலியன் வாலாபாக் படுகொலையைப் போன்றது.
ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்துக்குப் பக்க பலமாக இருந்து, இனி யாரும் எதிர்க்கக் கூடாது; வந்தால் சுட்டுக் கொல்வோம் என்கிற விதத்தில் கோரப் படுகொலை நடந்தது. உலகில் எங்கே மனித உரிமை மீறல் நடந்தாலும், மனித உரிமைக் கவுன்சிலில் சுட்டிக் காட்டுகிற உரிமை உலகில் உள்ள எல்லா மனிதர்களுக்கும் உண்டு. அந்த வiயில் மே 17 இயக்கத்தினுடைய ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி கருத்துக்களைப் பதிவு செய்துவிட்டு வந்த வேளையில் கைது செய்திருக்கிறார்கள். அவர் மீது 30 வழக்குகள் போட்டிருக்கிறார்கள்.
அவர் உயிருக்கு எந்த நேரமும் ஆபத்து ஏற்படலாம் என்று நான் மிகுந்த கவலையோடும், பயத்தோடும் இருக்கிறேன். இதனைக் கண்டித்து, முற்போக்கு இடதுசாரி சக்திகள், மதச்சார்பற்ற சக்திகளை எல்லாம் இணைத்து மாபெரும அறப்போராட்டத்தை நடத்தினோம்.
திருமுருகன் காந்தி நேற்று மதியம் சிறையில் மயங்கி விழுந்திருக்கிறார். இரண்டரை ஆண்டுகளாக பயன்படுத்தப்படாத ஒரு பாழடைந்த கட்டடத்தில், தனி அறையில் அவர் சிறை வைக்கப்பட்டிருக்கிறார். நான் பொடா கைதியாக இருந்திருக்கிறேன். எங்களுக்கு இப்படிப்பட்ட கொடுமைகள் இல்லை. 2500 சிறைவாசிகளுக்கும் கொடுத்த உணவைத்தான் நானும் சாப்பிட்டேன். அனைவரும் சாப்பிடுகிற அலுமினியத் தட்டில்தான் நானும் சாப்பிட்டேன். ஆனால் அந்த உணவால் உடல்நலக் கேடு ஏற்படவில்லை.
மரண தண்டனை கைதிகள்கூட யாரோடும் பேசலாம்; உலாவலாம். ஆனால், பகல் நேரத்தில்கூட திருமுருகன் காந்தியுடன் யாரையும் சந்திக்க விடுவது இல்லை. வெளியில் போகக்கூடாது என்று தனிச் சிறை அறையில் அடைத்து வைத்து இருக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் கடந்த சனிக்கிழமை மயங்கி விழுந்திருக்கிறார். அவர் அடைத்து வைக்கப்பட்டிருப்பது புதர்கள் மண்டிக் கிடக்கும் பாழடைந்த அறை என்பதால் பாம்புகள் அறைக்குள் வந்திருக்கிறது. சிறை வாயிலில் காவலுக்கு இருந்த வார்டர் தாழ்வாரத்துக்குச் சற்றுத் தொலைவில் இருந்து பார்த்துவிட்டு பாம்பை அடித்து விரட்டியிருக்கிறார். இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது.
நீதிமன்றத்துக்கு வருகிறபோதும் பகலில் உணவு கொடுப்பது இல்லை. இரவு செல்கிறபோது, உணவு தீர்ந்துவிட்டது என்கிறார்கள். பகலிலும், இரவிலும் உணவு கிடையாது. இப்படிப்பட்டக் கொடூரம் இந்தியாவில் எந்தச் சிறையிலும் நடக்கவில்லை. திருமுருகன் காந்தி மயக்கம் அடைந்து, சுவாசக் கோளாறு ஏற்பட்டு, அடுக்கம்பாறை மருத்துவமனைக்குக் கொண்டுசென்றபோது, இவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருக்கிறது. இங்கேயே வைத்து மருத்துவம் பார்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறி இருக்கிறார்கள். அரை மணி நேரத்திற்குப் பின்பு சிறைக்குக் கொண்டு செல்லுங்கள் என்று அதே மருத்துவர்கள் கூறி இருக்கிறார்கள். மருத்துவர்களுக்கு எங்கிருந்தோ அழுத்தம் வந்திருக்கிறது.
மருத்துவமனையில் வைத்திருந்தால் தப்பி ஓடி விடுவாரா? அவர் உயிருக்கே ஆபத்து என்று நாங்கள் கவலைப்படுகிறோம். எந்த வன்முறையிலும் ஈடுபடாதவர் தம்பி திருமுருகன் காந்தி. தேர்தலில் போட்டியிடுகிற அமைப்பைச் சேர்ந்தவர் அல்ல. ஈழத்தமிழர்களுக்காக, மீத்தேன், ஸ்டெர்லைட், நியூட்ரினோ போன்ற தமிழக வாழ்வாதாரங்களை அழிக்கும் திட்டங்களை எதிர்த்து ஆதராப்பூர்வமாக, அறிவுப்பூர்வமாக ஆங்கிலத்திலும், தமிழிலும் பதிவு செய்கிறார்; தரவுகள் தருகிறார். இந்த அரசாங்கம் திருமுருகன் காந்தியை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுவது மிகுந்த கவலை அளிக்கிறது. இது ஒரு பாசிசப் போக்கு.
வளர்மதி என்ற மாணவியைக் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். பேராசிரியர் ஜெயராமன் அவர்களை குண்டர் சட்டத்தில் அடைத்தார்கள். எனவே குண்டர் சட்டத்தையும், தேசப் பாதுகாப்புச் சட்டத்தையும் பயன்படுத்தி மனித உரிமைகளை நசுக்குகின்ற பாசிச வெறிபிடித்த அரசாக இந்த அரசு இருக்கின்றது.
குட்கா ஊழல் குற்றச்சாட்டு, முதலமைச்சர் மீதும், அமைச்சர் மீதும், காவல்துறை தலைமை இயக்குநர் மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை ஆதாரங்களோடு வைக்கப்பட்டு, குற்றக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டிய நிலையில், மேலும் மேலும் டெண்டர் ஒப்பந்தங்களை உறவுகளுக்குக் கொடுத்தார் என்ற ஊழல், மணற் கொள்ளை, மின் வாரியத்தில் ஊழல் என்று ஒவ்வொரு நாளும் ஆதாரங்களோடு திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் – சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் அன்புச் சகோதரர் தளபதி ஸ்டாலின் அவர்கள் ஆதாரங்களோடு குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறாரே! பொய் வழக்குப் போட்டு திருமுருகன் காந்தியைச் சிறையில் அடைக்கிற இந்த அரசு, என் மீது வழக்குத் தொடுங்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் கேட்டதால் இந்த அரசு அதிர்ந்துபோய் இருக்கிறது.
இலங்கையில் கோரமான இனப்படுகொலை செய்த கொலைகாரப் பாவி ராஜபக்சே. அதனால்தான் கூட்டணி வைத்திருந்தபோது, காங்கிரஸ் ஆட்சியில்கூட அந்தக் கொலைகார பாவியை பதவிப் பிரமாணத்து அழைக்கவில்லை. ஆனால் மதிப்புக்குரிய நரேந்தி மோடி அரசு பதவி ஏற்புக்கு அழைக்கிறார் என்கிறபோது, அழைத்தால் உங்களை எதிர்த்துக் கருப்புக்கொடி காட்டுவோம்; தமிழர்கள் நெஞ்சில் ஈட்டியாகக் குத்துகிறீர்கள் என்று நேருக்கு நேராகச் சொல்லிவிட்டு, 48 மணி நேரத்தில் தமிழகத்திலிருந்து ஆயிரக்கணக்கானவர்களைத் திரட்டிக் கொண்டுபோய் டெல்லி ஜந்தர் மந்தரில் கருப்புக்கொடி காட்டி, மோடி பதவிப் பிரமாணம் எடுக்கிற நேரத்தில் கைதானோம்.
அதே ராஜபக்சேவை அழைத்துக்கொண்டு வந்து, சிவப்புக் கம்பளம் விரித்து, ராஜ உபச்சாரம் செய்தார்கள். பிரதமர் மோடி ராஜபக்சே வீட்டுக்குச் சென்று சந்தித்து உபசரிப்பைப் பெற்றுக்கொண்டு வந்தார். இப்பொழுது பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர் ஏற்பாடு செய்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, இந்தியா உள்ளிட்ட ஏழு வல்லரசுகள் எங்களுக்கு உதவி செய்தன என்று. இலட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்த கொலைகாரப் பாவி சொல்கிறான், மூன்று இலட்சம் தமிழர்களை நாங்கள் காப்பாற்றினோம் என்று.
பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட ஒன்றரை இலட்சம் தமிழர்களை இராஜபக்சேவின் இராணுவம் ஈவு இரக்கமின்றிக் கொன்றது என்று ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூன் அமைத்த, மார்சுகி தாருஸ்மேன் மூவர் குழு 192 பக்க அறிக்கையைத் தந்திருக்கிறது. மருத்துவமனைகள் மீது குண்டு வீசப்பட்டன, சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தவர்கள் குண்டு வீசப்பட்டு செத்தார்கள், சின்னக் குழந்தைகள் கொல்லப்பட்டார்கள், கர்ப்பிணிப் பெண்கள் கொல்லப்பட்டாகள், பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் கொல்லப்பட்டார்கள், பெண்கள் கொடூரமாகக் கற்பழித்துக் கொல்லப்பட்டார்கள், இசைப்பிரியா 16 சிங்கள இராணுவ மிருகங்களால் நாசமாக்கப்பட்டுக் கொல்லப்படடார், எட்டுத் தமிழர்கள் அம்மணமாக இழுத்துவரப்பட்டு தலையில் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இந்தக் கோரப் படுகொலை செய்த கொலைகாரப் பாவி இங்கு வந்து உபதேசம் செய்கிறான்; தலைநகர் டெல்லியில் ராஜ உபச்சாரம் பெறுகிறான். அழைத்துக்கொண்டு வந்து உபச்சாரம் செய்த நரேந்திர மோடி அரசைக் குறை சொல்வதற்கு தமிழக அரசு அஞ்சி நடுங்குகிறது.
அதனால்தான் பெரியார் சிலையை உடைக்கச் சொன்ன நபரின் அருகில் போவது இல்லை. மத்திய அரசுக்கு கொத்தடிமை வேலை செய்கிற அரசாக தமிழக அரசு இருக்கிறது.
ஜனநாயகத்துக்கு, மதச்சார்பின்மைக்கு, இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு இன்றைக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. திராவிட இயக்கத்தை அழிக்கத் துடிக்கிறார்கள். நான் திராவிட இயக்கத்தில் வார்ப்பிக்கப்பட்டு 54 ஆண்டுகள் வளர்ந்தவன். பெரியார், அண்ணா ஊட்டி வளர்த்த உணர்வில் வளர்ந்தவன். தமிழ் ஈழ உணர்வும் திராவிட இயக்கத்தால்தான் ஏற்பட்டது. தமிழகத்தில் திராவிட இயக்கத்தையே அழித்தவிட வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்துத்துவா சக்திகள் முயல்கிறது. நூற்றாண்டு வரலாறு கொண்ட திராவிட இயக்கத்தைப் பாதுகாக்க வேண்டிய கடமை எனக்கும், மறுமலர்ச்சி தி.மு.க. சகாக்களுக்கும் இன்றைக்குத் தலையாய கடமையாக இருப்பதால், ஓட்டுக் கணக்குப் பார்க்காமல், பதவி கணக்குப் பார்க்காமல், தமிழக நலனையும், வாழ்வாதரத்தையும் காக்க, நதி ஆதாரங்களைக் காக்க, சுற்றுச் சூழலைக் காக்க, திராவிட இயக்கத்தைக் கண்போலக் காக்க ஆழமாகச் சிந்தித்து ஒருமனதாக முடிவெடுத்து திராவிட முன்னேற்றக் கழகத்தோடு கரம் கோர்த்து நாங்கள் எங்கள் செயல்பாட்டைத் தொடர்ந்துகொண்டு இருக்கிறோம்.
திருமுருகன் காந்தி மட்டும்தான் என்று அனைவரும் நினைக்கக்கூடாது. இன்றைக்குத் திருமுருகன் காந்திக்கு வந்தது நாளை எல்லோருக்கும் வரலாம். அவரது உயிருக்கே ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. அவர் உடல்நலத்துக்குக் கேடு ஏற்பட்டுவிட்டது. சுவாசக் குறைபாடு ஏற்பட்டிருக்கிறது. அவருக்குத் தரப்படுகிற உணவு சரியில்லாத காரணத்தால்தான் வயிற்றுப் போக்கும், வாந்தியும் வருகிறது. வெளி மருத்துவமனைக்குக் கொண்டுசென்று சிகிச்சை கொடுக்கப்படுவது இல்லை.
அரசுக்கு எதிராக ஜனநாயகக் குரல் கொடுப்பவர்களின் குரலை நசுக்குகின்ற அரசாக, எதேச்சதிகார மனப்பான்மை கொண்ட அரசாக, மத்திய அரசுக்கு தாழ்பணிந்து கிடக்கின்ற அரசாக இன்றைய தமிழக அரசு இருப்பதால், இந்த அரசு அகற்றப்பட வேண்டும் என்ற எண்ணம் தமிழகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் நெஞ்சில் இருக்கிறது. அதே போன்று இந்தியாவின் பன்முகத் தன்மையைப் பாதுகாக்க, இந்துத்துவா சக்திகளிடமிருந்து நாட்டை விடுவிக்க, நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் பா.ஜ.க. தலைமையிலான அரசு அமைந்துவிடக் கூடாது என்பதில் இந்தியா முழுவதும் மக்கள் மனதில் வேதனையும், கோபமும், உணர்வும் உருவாகி இருப்பதனால் அந்தக் கடமையையும் தோள் மேல் போட்டு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது.