ரபேல் ஒப்பந்தம் கையெழுத்தாகும் போது நான் அதிகாரத்தில் இல்லை: பிரான்சு அதிபர் மேக்ரான் பதில்
ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக ஆளும் பாரதீய ஜனதா அரசுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் வார்த்தை யுத்தம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் மிகப்பெரும் ஊழல் நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேரடியாக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இதற்கு மத்திய அரசும் பதிலடி கொடுத்து வருகிறது.
இதற்கிடையில், பிரான்சு முன்னாள் அதிபர் ஹாலண்டே வெளியிட்ட கருத்தும் இந்த விவகாரத்தில் பெரும் அதிர்வலைகளை கிளப்பியிருந்தது. அதாவது ரபேல், ஒப்பந்தம் ‘பிரான்ஸ் நாட்டின் ரபேல் ரக போர் விமானம் தயாரிப்பதற்காக டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்துடன் இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டது. யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற வாய்ப்பு பிரான்ஸூக்கு வழங்கப்படவில்லை. அம்பானி நிறுவனத்துடன் மட்டுமே இணைந்து பணியாற்ற ஒப்பந்தம் செய்யப்பட்டது’’ என தெரிவித்துள்ளார்.
இதையடுத்த பிரான்ஸ் அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், ‘‘ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் இந்தியாவி்ல் எந்த நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற முடிவில் பிரான்ஸ் அரசு எடுக்கவில்லை. இது பிரான்ஸ் வர்த்தக நிறுவனங்களின் தனிப்பட்ட உரிமை. அதில் அரசுக்கு எந்த தொடர்பும் இல்லை. ரபேல் ஒப்பந்த விவகாரத்தில், தரமான போர் விமானங்களை இந்தியாவுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதில் மட்டுமே பிரான்ஸ் அரசு உறுதியாக இருந்தது” என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இருப்பினும், ரபேல் போர் விமான ஒப்பந்தம் இந்திய அரசியலில், புயலை கிளப்பி வரும் நிலையில், பிரான்சின் தற்போதைய அதிபர் இம்மானுவேல் மேக்ரானிடம் செய்தியாளர்கள் இவ்விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு நேரடியாக பதிலளிக்காமல், நழுவிய மேக்ரான், “ இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் போது தான் பிரதமர் பொறுப்பில் இல்லை” என மழுப்பலாக தெரிவித்தார். மேலும், ”எங்களிடம் மிகவும் தெளிவான விதிமுறைகள் உள்ளது எனவும், இந்த விவகாரம் அரசாங்கக்களுக்கு இடையேயான ஆலோசனை என்றும் இந்த ஒப்பந்தம் இந்தியா பிரான்சு இடையேயான ராணுவம் பாதுகாப்பு உள்ளிட்ட விரிவான கட்டமைப்பில் ஒரு அங்கம்” என்றும் குறிப்பிட்டார்.