தமிழக அரசை விமர்சனம் செய்த என் நாக்கையும் அறுப்பார்களா? மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி
மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
அ.தி.மு.க. அரசை குறை கூறுபவர்களின் நாக்கை அறுப்பேன் என அமைச்சர் துரைக்கண்ணு பேசி இருப்பது முறையற்றது. அமைச்சர்கள் தங்களுடைய பொறுப்பை உணர்ந்து, அந்த பதவிக்கு கொடுக்க வேண்டிய மாண்பை காப்பாற்ற வேண்டும்.
வெட்டுவேன், குத்துவேன், நாக்கை அறுப்பேன் என்று சொன்னால் அதை ஏற்க முடியாது. நானும் அ.தி.மு.க. அரசை விமர்சனம் செய்து இருக்கிறேன். அதற்காக என் நாக்கையும் அறுப்பார்களா?. எல்லோரும் இதுபோல் பேசினால் என்னவாகும். ஆட்சியில் இருப்பவர்கள், தயவுசெய்து இதுபோன்ற விஷயங்களை தவிர்க்க வேண்டும்.
திருமாவளவன் மற்றும் தமிழ் அமைப்புகளுக்கு ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். ராஜீவ்காந்தி படுகொலை, இனப்படுகொலை ஆகியவற்றுக்கு பொறுப்பாளர்கள் காங்கிரஸ் கட்சிதான். மத்திய, மாநிலத்தில் ஆட்சியில் இருந்தபோது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?.
காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஆகியோர் ராஜீவ் கொலையாளிகள் 7 பேரையும் விடுதலை செய்யக்கூடாது என்று சொல்கின்றனர். 7 உயிர்களை வைத்து அரசியல் நடத்தாதீர்கள். அவர்கள் சிறையில் நிம்மதியாக இருந்துவிட்டு போகட்டும். கவர்னர் முடிவுபடி வெளியே வந்தால் வந்துவிட்டு போகட்டும். இதை பகடைக்காயாக பயன்படுத்தாதீர்கள்.
இலங்கை இனப்படுகொலைக்கு காங்கிரஸ் மற்றும் தி.மு.க. கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் பொறுப்பு ஏற்க வேண்டும். இந்திய அரசு உதவியதாக ராஜபக்சேவே சொல்லிய பிறகு வேறு யார் வந்து சொல்ல வேண்டும். பிரபாகரன் வந்து சொல்ல வேண்டுமா?. பிரபாகரன் வரமாட்டார் என்பது தெரியும். புலிகள் இயக்கத்தில் இருந்தவர்கள் எத்தனை பேர் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். இதற்கு பதில் என்ன?.
இது தமிழ் சமுதாயத்துக்கு காங்கிரஸ் கட்சி செய்துள்ள துரோகம். அதற்கு ஒருகாலமும் விடிவுகாலம் கிடையாது. இலங்கையில் 1½ லட்சம் தமிழர்கள் அடையாளம் தெரியாமல் அழிக்கப்பட்டதைப்போல் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி அடையாளம் தெரியாமல் ஆக்கப்பட்டால் மட்டும்தான் 1½ லட்சம் தமிழர்களுக்கு தமிழ்நாடு அஞ்சலி செலுத்தி இருப்பதாக அர்த்தமாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.