பிரதமரையும் விட்டுவைக்காத ‘போன் டிராப்’
பேசிக் கொண்டிருக்கும் போது போன் இணைப்பு துண்டிக்கப்படும் பிரச்னையை இதுவரை சாமானிய மக்கள் எதிர்கொண்டு வந்த நிலையில், தற்போது பிரதமர் மோடியும் அதற்கு தப்பவில்லை.
டில்லி விமான நிலையத்தில் இருந்து அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு செல்வதற்குள் பிரதமரின் போன் இணைப்பு பலமுறை துண்டிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தொலைத் தொடர்பு துறை அதிகாரிகளை அழைத்து, இந்த பிரச்னையை விரைவில் சரிசெய்யும்படி மோடி அறிவுறுத்தி உள்ளார். இந்த தொழில்நுட்ப பிரச்னையை உடனடியாக சரிசெய்ய வேண்டும் எனவும், வாடிக்கையாளர்களுக்கு திருப்திகரமான சேவையை வழங்க வேண்டும் எனவும் மோடி கூறி உள்ளார்.
தொலைத்தொடர்பு துறை செயலாளர்களுடனான மாதாந்திர ஆலோசனை கூட்டத்தின் போது, இணைப்பு துண்டிப்பு உள்ளிட்ட பல பிரச்னைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. அப்போது, எத்தனை பேர் டில்லி விமான நிலையத்தில் இருந்து தொடர்ந்து இணைப்பிற்காக முயற்சித்துள்ளனர், அவர்களில் எத்தனை பேருக்கு இது போன்று இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது என மோடி கேட்டுள்ளார். இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் எனவும் கூறி உள்ளார்.
இது போன்று இணைப்பு துண்டிக்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் எவ்வளவு அபராதம் வசூலிக்கப்படுகிறது என்றும் பிரதமர் மோடி கேட்டுள்ளார். ஒவ்வொரு 3 அழைப்புக்களுக்கு ரூ.1 அபராதம் விதிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து விதிகளை பின்பற்றாத தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு கூடுதலாக அபராதம் விதிக்க வேண்டும் எனவும், இதற்காக டிராய் புதிய விதிகளை விதிக்க வேண்டும் எனவும் மோடி கூறினார். வாடிக்கையாளர் சேவை தான் முக்கியம் எனவும் மோடி கூறி உள்ளார்.