பிரதமர் மோடிக்கு ஐநா சுற்றுச்சூழல் விருது
சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பை தலைமையேற்று வழிநடத்துவதற்காகவும், வரும் 2022-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் பிளாஸ்டிக்கை முற்றிலுமாக ஒழிப்போம் என்று உறுதியேற்றதற்காகவும் பிரதமர் மோடிக்கு ஐ.நா. சபையின் சுற்றுச்சூழல் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்வதில் முக்கியப் பங்காற்றியதற்காக உலக அளவில் 6 பேர் இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சுற்றுச்சூழல் பிரச்னைகளுக்கு தீர்வு காண துணிச்சலாகவும், புதுமையாகவும் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்ட அவர்களை கவுரவப்படுத்தும் வகையில் இந்த விருது அவர்களுக்கு அளிக்கப்படுகிறது என்று ஐ.நா. சுற்றுச்சூழல் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
பிரதமர் மோடி உள்ளிட்ட 6 பேர் மற்றும் அவர்கள் சார்ந்த அமைப்புகளுக்கு “சாம்பியன்ஸ் ஆஃப் தி எர்த்’ என்ற விருது அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், உலகிலேயே முதல் முறையாக சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக, முற்றிலும் சூரியமிசக்தி மின்சாரத்தை பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட கொச்சி விமான நிலையத்துக்கும் விருது வழங்கப்பட உள்ளது என்றும் அந்த அமைப்பு தெரிவித்தது.