புரோ கபடி லீக் போட்டியில் ‘தமிழ் தலைவாஸ் அணி சிறப்பான தொடக்கம் காணும்’ பயிற்சியாளர் பாஸ்கரன் நம்பிக்கை
‘புரோ கபடி லீக் போட்டி தொடரில் தமிழ் தலைவாஸ் அணி சிறப்பான தொடக்கம் காணும்’ என்று அந்த அணியின் பயிற்சியாளர் எடச்சேரி பாஸ்கரன் தெரிவித்தார்.
புரோ கபடி லீக்
12 அணிகள் பங்கேற்கும் 6–வது புரோ கபடி லீக் போட்டி தொடர் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் அடுத்த மாதம் (அக்டோபர்) 7–ந் தேதி தொடங்குகிறது. தொடக்க லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி, ‘ஹாட்ரிக்’ சாம்பியனான பாட்னா பைரட்ஸ் (இரவு 8 மணி) அணியை எதிர்கொள்கிறது. சென்னை சுற்று ஆட்டம் 11–ந் தேதி வரை நடைபெறுகிறது. சோனாபட், புனே, பாட்னா, நொய்டா உள்பட பல்வேறு நகரங்களில் இந்த போட்டி தொடர் அரங்கேறுகிறது. இறுதிப்போட்டி மும்பையில் ஜனவரி 5–ந் தேதி நடக்கிறது.
புரோ கபடி லீக் போட்டி தொடரில் கடந்த ஆண்டு அறிமுகமான தமிழ் தலைவாஸ் அணி முதல் சுற்றிலேயே வெளியேறியது. இந்த சீசனில் வலுவான அணியாக உருவெடுக்க வீரர்கள் பலரை மாற்றி இருக்கும் தமிழ் தலைவாஸ் அணி ஆகஸ்டு 30–ந் தேதி முதல் சென்னையில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது.
சிறப்பான தொடக்கம் காண்போம்
இந்த நிலையில் தமிழ் தலைவாஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் எடச்சேரி பாஸ்கரன் சென்னையில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:–
தமிழ் தலைவாஸ் அணியில் இளம் மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் சரியான அளவில் இடம் பிடித்துள்ளனர். இந்த சீசனுக்காக தமிழ் தலைவாஸ் அணி சிறப்பான முறையில் தயாராகி இருக்கிறது. எங்களது பலம், பலவீனத்தை அறிந்து அதற்கு தகுந்தபடி அணியினரை தயார்படுத்தி இருக்கிறோம். எதிரணியின் பலம், பலவீனத்தை அறிந்து ஆட்ட வியூகம் அமைத்து களம் காணுவோம். இந்த முறை எங்கள் பிரிவில் இடம் பிடித்து இருக்கும் எல்லா அணிகளும் வலுவானது தான். அதனை சமாளிக்க திட்டமிட்டு செயல்படுவோம்.
எங்கள் அணியில் 10 மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் உள்ளனர். அணியில் பலவீனம் எதுவும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. தொடக்க சுற்று ஆட்டங்களில் நாங்கள் சொந்த ஊரில் விளையாடுவது நம்பிக்கையை அதிகரித்துள்ளது. வீரர்கள் நல்ல புத்துணர்ச்சியுடன் உள்ளனர். உள்ளூர் ரசிகர்கள் ஆதரவு எங்களுக்கு நன்கு கிடைக்கும். உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் இந்த போட்டி தொடரில் நாங்கள் சிறப்பான தொடக்கம் காணுவோம். இந்த போட்டி தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது தான் எங்கள் முதல் இலக்காகும். அந்த இலக்கை எட்ட முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. ஏனெனில் அந்த அளவுக்கு நாங்கள் கடின பயிற்சி மேற்கொண்டு அணி வீரர்கள் இடையே நல்ல ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.