ஐபிஎல் போராட்ட வழக்கில் ஜாமீன் கோரி கருணாஸ் எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னை தியாகராயநகர் துணை போலீஸ் கமிஷனர் அரவிந்தன் ஆகியோரை விமர்சித்த வழக்கில் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவரான கருணாஸ் எம்.எல்.ஏ. கடந்த 23-ந்தேதி நுங்கம்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்ட போலீசாரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த வழக்கில் கருணாஸ் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். அவரது ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பளிப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், சென்னையில் கடந்த ஏப்ரல் 10-ந்தேதி ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின்போது கருணாஸ் மீது திருவல்லிக்கேணி போலீசார் ஏற்கனவே வழக்குப்பதிவு செய்திருந்தனர். கிரிக்கெட் ரசிகர்களை தாக்கியதாக கொலைமுயற்சி வழக்கும், தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் கருணாஸ் கைது செய்யப்பட்டுள்ளதாக திருவல்லிக்கேணி போலீசார் நேற்று முன்தினம் அறிவித்தனர். இதுதொடர்பாக எழும்பூர் 13-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டிலும் போலீசார் மனு அளித்தனர். அந்த மனுவை ஏற்றுக்கொண்ட மாஜிஸ்திரேட்டு கோபிநாத், கருணாசை கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார். அதன்படி நேற்று மீண்டும் கருணாஸ் வேலூர் சிறையில் இருந்து அழைத்துவரப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது கருணாஸ் மீது கொலைமுயற்சி வழக்கு பதிவு செய்ததற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறி, இந்த குற்றச்சாட்டில் கருணாசை நீதிமன்ற காவலுக்கு அனுப்ப அவரது வக்கீல்கள் ஆட்சேபனை தெரிவித்தனர். இதனை ஏற்றுக்கொண்டு கருணாஸ் மீதான கொலைமுயற்சி வழக்கை ரத்துசெய்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்கை மட்டும் ஏற்றுக்கொண்ட மாஜிஸ்திரேட்டு, இந்த வழக்கில் அக்டோபர் 4-ந்தேதி வரை கருணாசை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து கருணாஸ் மீண்டும் வேலூர் சிறைக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.
இந்த நிலையில், ஐபிஎல் போட்டியின் போது ரசிகர்களை தாக்கிய வழக்கில் ஜாமீன் கோரி எம்.எல்.ஏ கருணாஸ் , எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். கருணாஸ் தாக்கல் செய்த ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வருகிறது.