சென்னையை தொழில் அதிபர் வீட்டில் ரூ.100 கோடி மதிப்புடைய சிலைகள் மீட்பு
சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனி தெற்குமாட வீதி தெருவில் குடும்பத்துடன் வசித்து வருபவர் ரன்வீர்ஷா.
தொழில் அதிபரான இவர், சென்னை கிண்டியில் ஆடை ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார்.
நேற்று காலை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, துணை போலீஸ் சூப்பிரண்டு, 2 இன்ஸ்பெக்டர்கள், 6 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 35 போலீசார் அடங்கிய படையினர் சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள ரன்வீர்ஷா வீட்டுக்கு கோர்ட்டு உத்தரவுடன் சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனையில் ரன்வீர் ஷா வீட்டில் சிலைகள் மற்றும் கல்தூண்கள் அலங்காரமாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர், அங்கிருந்த 12 வெண்கல சிலைகள், 22 கலைநயம்மிக்க கல்தூண்கள் மற்றும் பிள்ளையார், நந்தி உள்பட 55 சிலைகள் என மொத்தம் 89 பழங்கால கலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இதில் கற்சிலைகள் அதிக எடை கொண்டவை என்பதால் கிரேன் உதவியுடன் அந்த சிலைகள் அனைத்தும் 4 லாரிகளில் ஏற்றப்பட்டு, கிண்டியில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இந்த சிலைகள் அனைத்தும் தமிழக கோவில்களில் இருந்து திருடப்பட்டவை என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் உறுதியாக தெரிவித்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட மொத்த சிலைகளின் மதிப்பு ரூ.100 கோடி இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏற்கனவே கடந்த 2016-ம் ஆண்டு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தீனதயாளன் என்பவரின் வீட்டில் இருந்து ஏராளமான கோவில் சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டபோது, சைதாப்பேட்டையில் உள்ள ரன்வீர்ஷா வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.
அப்போதும் அவரது வீட்டில் இந்த தொன்மையான சிலைகள் இருந்தன. ஆனால் அவை தமிழக கோவில்களில் இருந்து திருடி கடத்தப்பட்டவைகள்தான் என்பதற்கான ஆதாரம் இல்லை. இதனால் ரன்வீர்ஷா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து பல ஆதாரங்களை திரட்டிய சிலை கடத்தல் தடுப்பு படையினர், கோர்ட்டு உத்தரவுடன் நேற்று ரன்வீர்ஷா வீட்டில் சோதனை நடத்தி சிலைகளை பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழக கோவில்களின் சிலைகளை தனது வீட்டில் அலங்கார பொருளாக அடுக்கி வைத்திருந்த ரன்வீர்ஷா, ‘மின்சார கனவு’ என்ற படத்தில் கதாநாயகி கஜோலை பெண் பார்க்க வரும் கதாபாத்திரத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் ரன்வீர் ஷாவின் வக்கீல் கே.தங்கராசு, நிருபர்களிடம் கூறியதாவது:-
ரன்வீர்ஷா வீட்டில் இருந்து சிலைகளை போலீசார் விசாரணைக்காக எடுத்துச் செல்கின்றனர். மற்றபடி சட்டவிரோதமான விஷயம் எதுவும் இல்லை. சிலை வாங்கியதற்கான முறையான அனைத்து ஆவணங்களும் எங்களிடம் உள்ளது.
எனவே நீதிமன்றத்தின் மூலம் சிலைகளை திரும்ப பெறுவோம். சிலைகளை விற்பதற்கான உரிமம் உள்ளவர்களிடம் இருந்தே இந்த அனைத்து சிலைகளும் முறையாக வாங்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.