‘தந்தை கொடுத்த தீர்ப்பை மாற்றிய தனயன்’: உச்ச நீதிமன்றத்தில் இரு சுவாரஸ்யங்கள்
உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி டி.வி.சந்திரசூட் 2-வது முறையாகத் தனது தந்தை ஒய்,வி.சந்திரசூட் அளித்த தீர்ப்பை மாற்றி எழுதியுள்ளார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அந்தரங்கம் அடிப்படை உரிமையா என்ற வழக்கில் தனது தந்தை ஒய்.வி.சந்திரசூட் அளித்த தீர்ப்பை முதல்முறையாக பின்னுக்குத் தள்ளி டி.வி.சந்திரசூட் தீர்ப்பளித்தார்.
இப்போது 2-வதுமுறையாக ஐபிசி 497-வது பிரிவை ரத்து செய்து, திருமணத்தை மீறிய உறவு கிரிமினல்குற்றமல்ல என்று தீர்ப்பளித்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியாக இருந்தவர் ஒய்.வி.சந்திரசூட் . இவரின் மகன்தான் தற்போது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்துவரும் டி.வி.சந்திரசூட். இவர் 2 முறை தனது தந்தை ஓய்,வி.சந்திரசூட் அளித்த தீர்ப்பை மீறித் தான் தீர்ப்பு வழங்கியுள்ள சுவாரஸ்ய சம்பவம் நடந்திருக்கிறது.
கடந்த 1976-ம் ஆண்டு மிகப்பிரபலமான ஏ.டிஎம்.ஜபல்பூர் மற்றும் சிவகாந்த் சுக்லா இடையிலான வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்துத் தீர்ப்பு வழங்கியது. அதில் 4 நீதிபதிகள் ஒரே மாதிரியான தீர்ப்பையும், ஒரு நீதிபதி மாறுபட்ட தீர்ப்பையும் வழங்கினார். அந்த ஒரு நீதிபதி ஒய்.வி. சந்திரசூட்.
அந்த வழக்கில் அரசியலைப்புச் சட்டம் பிரிவு 21-ன்படி தனிநபர் சுதந்திரம் உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் ஒட்டு மொத்தமாக எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு உரிமை மீறப்பட்டாலும், அனைத்தும் மீறப்பட்டதாகவே அர்த்தம் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதனை தந்தை நீதிபதி ஏற்றுக் கொள்ளவில்லை, 4-1 என்பதில் அந்த மறுத்த ஒருவர் தந்தை நீதிபதி.
ஆனால், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அந்தரங்கம் அடிப்படை உரிமை என்ற வழக்கில் தீர்ப்பளித்த மகன் நீதிபதி டி.வி சந்திரசூட், தனது தந்தை வழங்கிய தீர்ப்பை மீறி அந்தரங்கம் என்பதும் அடிப்படை உரிமைதான். கடந்த 1976-ம் ஆண்டு வழங்கிய தீர்ப்பு என்பது அதிக தவறுடையது. என்று தெரிவித்தார்.
2-வதாக கடந்த 1985-ம் ஆண்டு மே 27-ம் தேதி சவுமித்ரா விஷ்னு, மத்திய அரசுக்கு இடையிலான வழக்கில் அளித்த தீர்ப்பையும் மாற்றி இன்று அளித்துள்ளார். சவுமித்ரா விஷ்னு என்பவர் ஐபிசி 497-வது பிரிவை ரத்து செய்ய வேண்டும் என்று தாக்கல் செய்த மனுவை ஓய்.வி.சந்திரசூட் விசாரணை செய்து அந்த மனுவை ரத்து செய்தார்.
அந்த வழக்கில் ஓய்.வி.சந்திரசூட் அளித்த தீர்ப்பில், தவறான உறவு வைத்துக்கொள்பவர்கள் தண்டிக்கப்பட்டால்தான் சமூகத்தின் நலன் காக்கப்படும். நிலையான திருமண பந்தம் மட்டும் தவறான உறவுகளைத் தடுக்க முடியாது என்று தெரிவித்து 497 பிரிவை ரத்து செய்ய மறுத்துவிட்டார்.
ஆனால், மகன் டி.வி சந்திரசூட் தனது தந்தை வழங்கிய தீர்ப்பை மீறி இன்று ஐசிபி 497 பிரிவு வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளார். அதாவது திருமண பந்தத்தை மீறிய சட்டவிரோத உறவு தவறில்லை. மனைவி கணவரின் சொத்து அல்ல. ஆதலால், 497-ன்பிரிவை ரத்து செய்கிறோம் என 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பளித்தனர். அதில் நீதிபதி சந்திரசூட்டும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
டி.வி. சந்திரசூட் இன்றிய வழங்கிய தீர்ப்பில், சவுமித்ரி விஷ்னு வழக்கில் அரசியலமைப்பின் நீதிபரிபாலன அம்சங்களைக் கருத்தில் கொள்வதில் தோல்வி அடைந்துவிட்டது. சமத்துவஉரிமைக்கு மாறாக 497 பிரிவு இருக்கிறது. உயிர்வாழ்வதற்கான உத்தரவாதம், தனிநபர் சுதந்திரம் ஆகியவை மரியாதை, சுயஅதிகாரம், அந்தரங்கம் ஆகியவை அங்கீகரிக்கப்படும்போது கிடைக்கிறது. பாலிச்சமத்துவம் என்பது சமூகத்தில் கடைப்பிடிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.