மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் மோடி
மாலத்தீவு புதிய அதிபராக பதவியேற்கும் சோலீயின் பதவியேற்பு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார்.
அண்டை நாடான மாலத்தீவில் அண்மையில் நடந்த தேர்தலில் அதிபர் அப்துல்லா யாமீன் தோல்வியடைந்தார். எதிர்க்கட்சி கூட்டமைப்பு வேட்பாளரான இப்ராஹிம் முகமது சோலீ 58 சதவீத வாக்குகளுடன் வெற்றி பெற்றார். இந்நிலையில் நவம்பரில் நடக்கவுள்ள பதவியேற்பு விழாவிற்கு வருமாறு இந்திய பிரதமர் மோடிக்கு மாலத்தீவு புதிய அதிபர் சோலீ அழைப்பு விடுத்துள்ளார்.
மோடி செல்லாத தேசம் :
பிரதமராக பதவியேற்ற மோடி உலகின் பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஆனால் அண்டை நாடான மாலத்தீவுக்கு மட்டும் அவர் இதுவரை செல்லவில்லை. யாமீனின் சீன ஆதரவு நிலைப்பாடு காரணமாக தொடர்ந்து மாலத்தீவை மோடி புறக்கணித்து வந்தார்.
தேர்தல் நேர்மையாக நடக்க இந்தியா உதவ வேண்டும் என மாலத்தீவு எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்தன. இந்நிலையில் எதிர்க்கட்சி வெற்றி பெற்றுள்ளது. புதிய அதிபர் சோலீ இந்தியா ஆதரவு சிந்தனை கொண்டனர். எனவே பதவியேற்பு விழாவில் மோடி பங்கேற்பார் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.