‘ரபேல்’ போர் விமான விலை குறித்து ஆட்சேபனை தெரிவித்த அதிகாரி விடுமுறையில் அனுப்பப்பட்டாரா? நிர்மலா சீதாராமன் விளக்கம்
‘ரபேல்’ போர் விமானங்கள் வாங்க போடப்பட்ட ஒப்பந்தம் குறித்து எதிர்க்கட்சிகள் சர்ச்சையை எழுப்பி வருகின்றன. இந்நிலையில், நேற்று சில ஊடகங்களில் புதிய தகவல் வெளியானது.
கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம், பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேசன் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தும் குழுவில் இடம்பெற்று இருந்தவர், ராஜீவ் வர்மா. அவர் ராணுவ அமைச்சகத்தில் இணை செயலாளராகவும், தளவாடங்கள் கொள்முதல் மேலாளராகவும் இருந்தார்.
அவர் ‘ரபேல்’ போர் விமானங்களுக்கு கொடுக்கப்படும் விலை மிகவும் அதிகம் என்று ஆட்சேபனை எழுப்பியதாகவும், தனது அதிருப்தியை அவர் எழுத்துமூலம் குறிப்பிட்டதாகவும், ஆனால், அவரது எதிர்ப்பை அவருடைய உயர் அதிகாரி நிராகரித்து விட்டதாகவும் அச்செய்தியில் கூறப்பட்டு இருந்தது.
நிர்மலா சீதாராமன்
இதற்கிடையே, இதுபற்றி ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் ஒரு செய்தி சேனலுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-
பேச்சுவார்த்தை நடத்தும்போது, அதில் ஈடுபடும் அதிகாரிகளிடையே கருத்து மாறுபாடுகள் எழுவது இயற்கைதான். சம்பந்தப்பட்ட அதிகாரியின் மாறுபட்ட கருத்து, பதிவு செய்யப்பட்டு உள்ளது.
அதன்பிறகு, கூட்டு முடிவு எடுக்கப்பட்டது. மத்திய மந்திரிசபையின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட இறுதி குறிப்பில் அந்த அதிகாரியும் கையெழுத்து போட்டுள்ளார். அதை ஏற்றுத்தான், மந்திரிசபை கூட்டத்தில், இந்த ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மேலும், அதிருப்தி தெரிவித்த அதிகாரி ராஜீவ் வர்மா, விடுமுறையில் அனுப்பப்பட்டதாகவும் செய்தி வெளியாகி உள்ளது. அது தவறான தகவல். அவர் முன்கூட்டியே திட்டமிட்டபடி, வெளிநாட்டுக்கு பயிற்சிக்காக சென்றார்.
இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.
ராகுல் விமர்சனம்
முன்னதாக, இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறி இருந்ததாவது:-
பிரதமர் மோடியும், அம்பானியும் இந்திய ராணுவத்தின் வலிமையை குறைத்து விட்டனர். இந்த கொள்ளையை தடுக்க முயன்ற அதிகாரி தண்டிக்கப்பட்டு உள்ளார். அதை செய்த உயர் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது. இந்த கொள்ளைக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.