அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணிக்கு வராவிட்டால் சம்பளம் கிடையாது தலைமைச்செயலாளர் எச்சரிக்கை
ஓய்வூதியம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ உள்ளிட்ட ஊழியர் சங்கங்கள் வருகிற 4-ந் தேதி (வியாழக்கிழமை) தற்செயல் விடுப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து உள்ளனர்.
இந்த நிலையில் தமிழக அரசின் தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அனைத்து துறை செயலாளர்கள், துறைத்தலைவர்களுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
சம்பளம் கிடையாது
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தினர் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபடுவதால், அரசு அலுவலகங்களின் வழக்கமான செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படும். மேலும், அது தமிழ்நாடு அரசு ஊழியர்களின் விதிகளுக்கு எதிரானது. எனவே, வருகிற 4-ந் தேதி எந்த ஊழியராவது தற்செயல் விடுப்பு கோரி இருந்தால் அதற்குரிய காரணத்தை நன்கு ஆராய்ந்தபிறகே விடுப்பு அளிக்க வேண்டும்.
எனவே, விடுப்பை அளிக்கும் அதிகாரம் பெற்ற அலுவலக உயர் அதிகாரிகள், துறை தலைவர்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும். அரசு ஊழியர்கள் அல்லது ஆசிரியர்கள் வருகிற 4-ந் தேதியன்று பணிக்கு வராமல் இருந்தால் அது அனுமதி பெறாமல் எடுக்கப்பட்ட விடுப்பாக கருதப்பட்டு அன்றைய தினத்துக்கான சம்பளமோ அல்லது படிகளோ அளிக்கப்படமாட்டாது.
அனுமதி பெறாமல்…
மேலும், கிராம, தாலுகா மற்றும் மாவட்ட அளவில் வருகிற 4-ந் தேதி பணிக்கு வந்த ஊழியர்களின் விவரங்கள் அடங்கிய பட்டியலை தலைமைச்செயலகத்தில் உள்ள துறை தலைமைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
பணிக்கு வந்தவர்கள் எத்தனை பேர்?, அனுமதி பெற்று விடுப்பு எடுத்தவர்கள் எத்தனை பேர்?, அனுமதி பெறாமல் விடுப்பு எடுத்தவர்கள் எத்தனை பேர்? ஆகிய விவரங்களை பட்டியலாக தொகுத்து அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு அந்த உத்தரவில் தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் கூறி உள்ளார்.