மதுரையில் எய்ம்ஸ் : மத்திய அமைச்சரவை ஒப்புதல் தரவில்லை
மதுரை தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக மதுரையைச் சேர்ந்த ஹக்கிம் என்பவர் மத்திய அரசிடம் ஆர்டிஐ மூலம் பல்வேறு கேள்விகள் கேட்டுள்ளார். எய்ம்ஸ் அமைக்க எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது உள்ளிட்ட பல கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய சுகாதாரத்துறை அளித்துள்ள பதிலில், மதுரையில் எய்ம்ஸ் அமைய மத்திய அமைச்சரவை இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. அதற்காக இதுவரை எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக எந்த நிறுவனத்திற்கும்டெண்டர் விடப்படவில்லை. 2014 ம் ஆண்டு ஏப்ரல் 1 ம் தேதி முதல் இதுவரை நாடு முழுவதும் 14 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ள பதில் குறித்த கேள்விக்கு விளக்கம் அளித்துள்ள தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மதுரையில் எய்ம்ஸ் அமைக்க எந்த தடையும் இல்லை. அக்.,9 ல் டில்லியில் நடைபெற உள்ள கூட்டத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் இதுவரை கோரிக்கை முன்வைக்க உள்ளேன். மதுரையில் எய்ம்ஸ் அமைக்க படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும். நிதி ஒதுக்கப்பட்ட பிறகு டெண்டர் விடப்பட்டு, பணிகள் துவங்கும் என தெரிவித்துள்ளார்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக இடம் தேர்வு செய்யும் பணி உள்ளிட்டவற்றை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் சமீபத்தில் ஆய்வு நடத்தி உள்ள நிலையில் இந்த தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.