Breaking News
ஒரு நாள் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசை: இந்திய வீரர்கள் ரோகித் சர்மா, தவான் முன்னேற்றம் ஆல்–ரவுண்டரில் ரஷித்கான் முதலிடம்

சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வீரர்களின் தரவரிசையில் இந்தியாவின் ரோகித் சர்மா, தவான் முன்னேற்றம் அடைந்துள்ளனர். ஆல்–ரவுண்டரில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித்கான் முதலிடத்தை பிடித்துள்ளார்.

ரோகித், தவான்
6 அணிகள் பங்கேற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து ஒரு நாள் போட்டி வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது.

இதன்படி பேட்டிங் தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி முதலிடத்தில் நீடிக்கிறார். ஆசிய கிரிக்கெட்டில் ஒரு சதம், 2 அரைசதம் உள்பட 317 ரன்கள் சேர்த்த இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 2 இடங்கள் முன்னேறி 2–வது இடத்தை பிடித்துள்ளார். அவரது சிறந்த தரநிலை இதுவாகும். கோலியை நெருங்கி வரும் ரோகித் சர்மா அவரை விட இன்னும் 42 புள்ளிகள் பின்தங்கி இருக்கிறார். ஆசிய போட்டியில் 2 சதம் உள்பட 342 ரன்கள் குவித்து தொடர்நாயகனாக அறிவிக்கப்பட்ட மற்றொரு இந்திய வீரர் ஷிகர் தவான் 4 இடங்கள் ஏற்றம் கண்டு 5–வது இடத்தை பிடித்துள்ளார். பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் 4 இடங்கள் சரிந்து 6–வது இடத்துக்கு தள்ளப்பட்டார். ஆசிய போட்டியில் 302 ரன்கள் சேர்த்த வங்காளதேச விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிம் 6 இடங்கள் உயர்ந்து தனது வாழ்க்கையில் சிறந்த நிலையாக 16–வது இடத்தை (702 புள்ளி) எட்டியுள்ளார். இந்திய விக்கெட் கீப்பர் டோனி 18–வது இடம் வகிக்கிறார்.

ரஷித்கான்
பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். ஆசிய போட்டியில் 10 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 6–வது இடத்தில் இருந்து 3–வது இடத்துக்கு வந்துள்ளார். அதே சமயம் டாப்–10–ஐ விட்டு வெளியேற்றப்பட்ட சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் (இந்தியா) 2 இடங்கள் சறுக்கி 11–வது இடத்துக்கு நகர்ந்துள்ளார்.

ஆல்–ரவுண்டர்களின் தரவரிசையில் ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் 20 வயதான ரஷித்கான் முதல்முறையாக முதலிட அரியணையில் ஏறியுள்ளார். ஆசிய கிரிக்கெட் தொடரில் 10 விக்கெட்டுகளுடன், 87 ரன்களும் எடுத்து அசத்திய அவர் 6 இடங்கள் எகிறி மொத்தம் 353 புள்ளிகளுடன் ‘நம்பர் ஒன்’ அந்தஸ்தை அடைந்துள்ளார். ஆல்–ரவுண்டரில் முதலிடத்தை எட்டிய 32–வது வீரர் ரஷித்கான் ஆவார். இதில் இதுவரை ‘நம்பர் ஒன்’ ஆக இருந்த வங்காளதேச வீரர் ‌ஷகிப் அல்–ஹசன் 2–வது இடத்துக்கு (341 புள்ளி) இறங்கினார்.

அணிகளின் தரவரிசை
ஒரு நாள் போட்டி அணிகளின் தரவரிசையில் எந்த மாற்றமும் இல்லை. முதல் இடத்தில் இங்கிலாந்தும் (127 புள்ளி), 2–வது இடத்தில் இந்தியாவும் (122 புள்ளி), 3–வது இடத்தில் நியூசிலாந்தும் (112 புள்ளி) இருக்கின்றன. இதே போல் 4 முதல் 10–வது இடங்களில் முறையே தென்ஆப்பிரிக்கா (110 புள்ளி), பாகிஸ்தான் (101 புள்ளி) ஆஸ்திரேலியா (100 புள்ளி), வங்காளதேசம் (92 புள்ளி), இலங்கை (77 புள்ளி), வெஸ்ட் இண்டீஸ் (69 புள்ளி) ஆப்கானிஸ்தான் (67 புள்ளி) ஆகிய அணிகள் உள்ளன.

டாப்–10 பேட்ஸ்மேன்கள்

வரிசை வீரர் நாடு புள்ளி

1 விராட் கோலி இந்தியா 884

2 ரோகித் சர்மா இந்தியா 842

3 ஜோ ரூட் இங்கிலாந்து 818

4 வார்னர் ஆஸ்திரேலியா 803

5 ஷிகர் தவான் இந்தியா 802

6 பாபர் அசாம் பாகிஸ்தான் 798

7 ராஸ் டெய்லர் நியூசிலாந்து 785

8 குயின்டான் டி காக் தென்ஆப்பிரிக்கா 781

9 வில்லியம்சன் நியூசிலாந்து 778

10 ஜானி பேர்ஸ்டோ இங்கிலாந்து 769

டாப்–10 பந்து வீச்சாளர்கள்

1 பும்ரா இந்தியா 797

2 ரஷித்கான் ஆப்கானிஸ்தான் 788

3 குல்தீப் யாதவ் இந்தியா 700

4 டிரென்ட் பவுல்ட் நியூசிலாந்து 699

5 ஹேசில்வுட் ஆஸ்திரேலியா 696

6 அடில் ரஷித் இங்கிலாந்து 681

6 ஹசன் அலி பாகிஸ்தான் 681

8 முஜீப் ரகுமான் ஆப்கானிஸ்தான் 679

9 ரபடா தென்ஆப்பிரிக்கா 676

10 இம்ரான் தாஹிர் தென்ஆப்பிரிக்கா 666

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.