Breaking News
சென்னை அருகே உலகத் தரம் வாய்ந்த புதிய பன்னாட்டு விமான நிலையம் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவில் பேசிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னை அருகே புதிய பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என்றும், கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்டப்படும் என்றும் அறிவித்தார்.

அ.தி.மு.க.வின் நிறுவனரும், முன்னாள் முதல்–அமைச்சருமான எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா, தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தமிழக அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வந்தது.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா
31 மாவட்டங்களில் கொண்டாடப்பட்ட நிலையில், நிறைவாக சென்னையில் நேற்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது. நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இந்த விழாவுடன் தமிழ்நாடு 50–ம் ஆண்டு பொன் விழாவும் சேர்த்து கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு சபாநாயகர் ப.தனபால் தலைமை தாங்கினார். துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் பா.வளர்மதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு, எம்.ஜி.ஆர். உருவப் படத்தினை திறந்துவைத்து மரியாதை செலுத்தினார். அருகே இருந்த ஜெயலலிதா உருவப் படத்துக்கும் அனைவரும் மரியாதை செலுத்தினார்கள்.

சிறப்பு தபால் தலை வெளியீடு
தொடர்ந்து, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு சிறப்பு தபால் தலையையும், நூற்றாண்டு விழா மலரையும் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட, துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெற்றுக்கொண்டார்.

இதேபோல், எம்.ஜி.ஆரின் சட்டமன்ற உரைகளின் தொகுப்பை சபாநாயகர் ப.தனபாலும், எம்.ஜி.ஆரின் உரைகள் குறித்த தொகுப்பை பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரையும், எம்.ஜி.ஆரின் பொன்மொழிகள் தொகுப்பை மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமாரும், எம்.ஜி.ஆரின் புகைப்பட தொகுப்பை செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவும், முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட பெற்றுக்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து, ரூ.18 கோடி மதிப்பிலான 13 புதிய திட்டங்களை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்.

மேலும், எம்.ஜி.ஆருடன் திரைத்துறையில் பணியாற்றிய நடிகர்–நடிகைகள், கலைஞர்களை எடப்பாடி பழனிசாமி கவுரவித்ததுடன், தமிழ்நாடு பொன் விழா ஆண்டையொட்டி நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தங்கப் பதக்கம் அணிவித்து, காசோலை, பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார். மேலும், பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளையும் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

விழாவில், முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

வடசென்னை மக்களுக்கு சிறப்பு திட்டம்
பெருநகர சென்னை மாநகராட்சியின் மண்டலம் 1 முதல் 5 வரை உள்ள பகுதிகளில் வசித்து வரும் வடசென்னை மக்களின் கோரிக்கைகளை ஏற்று, அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக ஒரு சிறப்பு திட்டத்தை உருவாக்குவது பற்றி பரிசீலித்து அறிக்கை அளிக்க அ.தி.மு.க. அரசு ஒரு நிறுவனத்தை அமர்த்தியது. அந்நிறுவனம் ஓர் திட்ட அறிக்கையை தயாரித்து தமிழ்நாடு அரசுக்கு வழங்கி உள்ளது.

அதன்படி, மீன்பிடி படகு தயாரித்தல், மீன்பிடி படகு பழுதுபார்க்கும் தளம், படகுத்துறை மேம்பாடு, கல்வி மேம்பாட்டு பணிகள், அடிப்படை கட்டமைப்புகள் உருவாக்குதல், நலவாழ்வுத் திட்டங்களுக்கான கட்டமைப்புகளை மேம்படுத்துதல், வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல், தொழிற்பயிற்சி வழங்குதல், குடியிருப்புகளை மேம்படுத்துதல், விளையாட்டு மேம்பாடு உள்ளிட்ட திட்டங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. அந்த அறிக்கையை விரைந்து பரிசீலித்து அ.தி.மு.க. அரசு தக்க மேல் நடவடிக்கை எடுக்கும்.

அனைவருக்கும் வீடு
நகரப் பகுதிகளில் வீடுகளின் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதை தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் நகரங்களில் குறிப்பாக, சென்னையில் வாழும் மக்களின் கோரிக்கைகளை ஏற்று, அ.தி.மு.க. அரசு அனைத்துத் தரப்பினருக்கும் இலவசமாக அனுமதிக்கப்படும் தளப் பரப்பளவு குறியீட்டை தற்போதுள்ள 1.5–ல் இருந்து 0.5 உயர்த்தி, 2.0 ஆக மாற்றியமைக்கப்படும்.

அதே போல் ஊக்க தளப் பரப்பளவு குறியீடும் உயர்த்தப்படும். கட்டிட விதிமுறைகளில் இதற்கான மாற்றங்கள் செய்து 1–10–2018 (இன்று) முதல் இந்த மாற்றங்கள் நடைமுறைக்கு வரும். இதன் மூலம் அனைவருக்கும் வீடு என்ற முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் தொலைநோக்குப் பார்வை 2023–ன் இலக்கை அடைய முடியும்.

பன்னாட்டு விமான நிலையம்
சென்னையின் தொழில் வளர்ச்சி, அதிகரித்து வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை மற்றும் மக்களின் வாழ்க்கை தரம் உயர்வின் காரணமாக தற்போதுள்ள சென்னை விமான நிலையம் வருகின்ற 2024–ம் ஆண்டில் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து ஆகியவற்றை கையாள்வதில் முழு நிறைவை அடைந்துவிடும் என்பதால், புதிய விமான நிலையம் அமைக்க வேண்டியது அவசியமாகிறது என்பதை உணர்ந்த அ.தி.மு.க. அரசு சென்னைக்கு அருகில் உலகத் தரம் வாய்ந்த புதிய பன்னாட்டு விமான நிலையம் ஒன்றை அமைக்கும்.

தமிழ்நாட்டில் உள்ள நீர்வள ஆதாரங்களை மேலும் செம்மைப்படுத்த, பன்னாட்டு நிதி நிறுவனங்களின் உதவி பெற்று பாசனம் மற்றும் குடிநீர் திட்டங்களை தயாரித்து, செயல்படுத்தும் வகையில் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்தைப் போன்று, தமிழ்நாடு நீர்வள ஆதாரங்களை பாதுகாத்தல் மற்றும் நதிகளை சீரமைக்கும் பணிகளை செயல்படுத்துவதற்கு ஏதுவாக ‘‘தமிழ்நாடு நீர்வள ஆதாரங்களை பாதுகாத்தல் மற்றும் நதிகளை சீரமைத்தல் கழகம்’’ என்ற ஒரு அமைப்பு ஏற்படுத்தப்படும். இந்த கழகம் செயல்பட ஏதுவாக முதன்மைச் செயலாளர் நிலையில் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் உடனடியாக நியமிக்கப்படுவார்.

வீட்டு காய்கறி உற்பத்தி திட்டம்
தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் மற்றும் விவசாயிகள் தங்கள் வீடு அல்லது தங்கள் நிலத்தின் ஒரு பகுதியில் காய்கறிகள் உற்பத்தி செய்வதை ஊக்கப்படுத்தும் வகையில், ஒரு புதிய முன்னோடித் திட்டமாக ‘‘முதல்–அமைச்சரின் வீட்டுக் காய்கறி உற்பத்தித் திட்டம்’’ இந்த நிதியாண்டில் கிராமப்புறங்களில் தொடங்கப்படும்.

சிங்கபெருமாள்கோவில் மற்றும் வீராபுரம் ஆகிய 230 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்களின் மின் சுமையை குறைப்பதற்காகவும், மாம்பாக்கம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளின் பெருகிவரும் மின் தேவையை ஈடுசெய்யவும், மாம்பாக்கத்தில் 230 கிலோ வோல்ட் துணை மின் நிலையம் ரூ.137 கோடியே 37 லட்சம் மதிப்பில் அமைக்கப்படும்.

பள்ளிக்கரணையில் மருத்துவமனை
வியாசர்பாடி, குக்ஸ் சாலை, கீழ்ப்பாக்கம் நீரேற்று நிலையம் ஆகிய துணை மின் நிலையங்களின் மின் சுமையை குறைக்கும் வகையில், மதுரவாயல், எழும்பூர், பி அண்டு சி மில் மற்றும் ஐ.சி.எப். ஆகிய 4 இடங்களில் உள்ள 33 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்கள் அந்தந்த இடங்களிலேயே ரூ.203 கோடியே 48 லட்சம் செலவில் 110 கிலோ வோல்ட் வளிம காப்பு துணை மின் நிலையங்களாக தரம் உயர்த்தப்படும்.

தென்சென்னை புறநகர் பகுதியில் வசிக்கும் ஏழை – எளிய மக்களின் நலன் கருதி, பள்ளிக்கரணை பகுதியில் தேசிய நலவாழ்வுக் குழும நிதியில் 100 படுக்கைகள் கொண்ட பள்ளிக்கரணையில் புறநகர் மருத்துவமனை ஒன்று சுமார் ரூ.31 கோடி செலவில் அமைக்கப்படும். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, 12 அறுவை அரங்கங்கள் மற்றும் 260 படுக்கை வசதி கொண்ட அடித்தளம் மற்றும் 6 தளங்கள் கொண்ட புதிய கட்டிடம், சிறுநீரக அறுவை சிகிச்சைப் பிரிவு, மகப்பேறு பிரிவு, சிறுநீரகவியல் பிரிவு, ரத்தம் சுத்திகரிப்புப் பிரிவு, பொது மருத்துவம், உடனடி சிகிச்சைப் பிரிவு மற்றும் இமேஜிங் பிரிவு ஆகிய பிரிவுகளுடன் கூடிய ஒரு அலகு ரூ.141 கோடியே 42 லட்சம் செலவில் கட்டப்படும்.

சாலை விரிவாக்க பணிகள்
மேலும் இம்மருத்துவமனைக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன், சி.டி. ஸ்கேன், சி.ஆர்.எம். ஊடுகதிர் அலகு, செயற்கை சுவாச கருவிகள், அல்ட்ரா சவுண்டு கருவி போன்ற மருத்துவக் கருவிகள் ரூ.134 கோடியே 18 லட்சம் செலவில் வழங்கப்படும்.

சென்னை புறநகர் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதத்தில் முக்கிய சாலை கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.216 கோடி மதிப்பில் பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டு செயலாக்கத்தில் உள்ளன. இதன் தொடர்ச்சியாக தற்போது 45.15 கிலோ மீட்டர் நீள முக்கிய சாலைகளை அகலப்படுத்தி மேம்பாடு செய்யும் பணிகள் ரூ.344 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படும்.

விரிவாக்கப்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில் 2 கட்டங்களாக ரூ.400 கோடி மதிப்பில் எடுத்துக்கொள்ளப்பட்ட சாலை விரிவாக்கப் பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ளன. மூன்றாம் கட்டமாக விரிவுபடுத்தப்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் ரூ.125 கோடியே 87 லட்சம் மதிப்பீட்டில் சாலை கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படும்.

ரெயில்வே மேம்பாலம்
தாம்பரம் கிழக்கு புறவழிச்சாலை (கட்டம் –2) ரூ.33 கோடியே 35 லட்சம் மதிப்பில் அமைக்கப்படும். பரங்கிமலை – பூந்தமல்லி ஆவடி சாலையில் ஆவடி அருகே ரூ.12 கோடி மதிப்பில் ரெயில்வே மேம்பாலம் அகலப்படுத்தப்படும். தில்லை கங்கா நகரில் உள்ள ரெயில்வே கீழ்ப் பாலத்திற்கு கூடுதலாக மேம்பாலம் கட்டும் பணிக்கான விரிவான திட்ட அறிக்கை ரூ.50 லட்சத்து 59 ஆயிரம் மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்டு வருகிறது.

சென்னை அடையாறு பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு சர்தார் பட்டேல் சாலையில் மத்திய கைலாஷ் பகுதியில் சாலை மேம்பாலம் கட்ட, ரூ.37 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். சென்னை திருத்தணி ரேணிகுண்டா சாலையில் கி.மீ. 75/6–ல் ரெயில்வே மேம்பாலம் அமைக்க ரூ.48 லட்சம் மதிப்பில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.

சென்னை உள்வட்டச் சாலையில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி அருகில் நடை மேம்பாலம் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை ரூ.10 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் தயாரிக்கப்பட்டு வருகிறது.

கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயர்
ராயபுரம், தொழிற்கல்வி பயிலும் மகளிர் விடுதிக் கட்டிடம் பழுதடைந்த நிலையில் உள்ளதால், அக்கட்டிடத்தினை இடித்துவிட்டு, அந்த இடத்திலேயே ரூ.3 கோடியே 72 லட்சம் மதிப்பில் 2 மாணவியர் விடுதிகள் கட்டப்படும். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, எம்.ஜி.ஆரின் இல்லமான ராமாவரம் தோட்டம் அமைந்துள்ள சுமார் 20.8 கிலோ மீட்டர் நீளமுள்ள பரங்கிமலை – பூந்தமல்லி – ஆவடி நெடுஞ்சாலை, எம்.ஜி.ஆரின் நினைவினைப் போற்றும் வகையில், எம்.ஜி.ஆர். நெடுஞ்சாலை என்று பெயர் சூட்டப்படுகிறது.

ஆசியாவிலேயே மிகப்பெரிய பஸ் நிலையமாக விளங்கும் கோயம்பேடு பஸ் நிலையம் ரூ.102 கோடி செலவில் கட்டப்பட்டு, 2002–ம் ஆண்டு முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த பஸ் நிலையத்திற்கு நாள் ஒன்றுக்கு 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கிறார்கள். ஆகவே, இந்த கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர். பஸ் நிலையம் என்று பெயர் சூட்டப்படுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

அமைச்சர்கள்
விழாவில், பாராளுமன்ற துணை சபாநாயகர் மு.தம்பிதுரை, அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள், அ.தி.மு.க. மாநில – மாவட்ட நிர்வாகிகள், அ.தி.மு.க. எம்.பி. – எம்.எல்.ஏ.க்கள், நடிகர்–நடிகைகள், அ.தி.மு.க. தொண்டர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக, நேற்று காலை விழா நடைபெற்ற மைதானத்தில் எம்.ஜி.ஆர். புகைப்பட கண்காட்சியை துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திறந்துவைத்தார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.