Breaking News
‘டாஸ்மாக்’ கடைகளில் கரை வேட்டிகளால் நெரிசல்

எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்க, நேற்று சென்னை வந்த, எம்.ஜி.ஆர்., விசுவாசிகள் மற்றும், அ.தி.மு.க., தொண்டர்கள், மெரினா கடற்கரையில் உள்ள, தலைவர்களின் நினைவிடங்களை பார்வையிட்டனர். மெட்ரோ ரயிலில் பயணம் செய்தனர். ஏராளமானோர், ‘டாஸ்மாக்’ கடைகளையும் முற்றுகையிட்டனர்.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள, டாஸ்மாக் கடைகளில், பொதுவாகவே, ஞாயிற்றுக்கிழமைகளில், ‘குடி’மகன்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். நேற்று விழாவிற்கு வந்தவர்களும், கடைகளை முற்றுகையிட்டதால், பெரும்பாலான கடைகளில், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பலர்,அ.தி.மு.க., கொடிகளை கைகளில் ஏந்தியபடியே, டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை வாங்கினர்.அனைத்து கடைகளிலும், சரக்கு விற்பனை அமோகமாக நடந்தது. இதனால், அ.தி.மு.க., தொண்டர்கள் மட்டுமின்றி, டாஸ்மாக் ஊழியர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். அதேபோல, ஓட்டல்கள், சாலையோர கடைகளிலும், நேற்று விற்பனை அமோகமாக இருந்தது. விழாவில், திரையுலகில், எம்.ஜி.ஆருடன் பணிபுரிந்த, நடிகையர், லதா, வெண்ணிற ஆடை நிர்மலா, காஞ்சனா, குமாரி சச்சு உட்பட, பலர்கவுரவிக்கப்பட்டனர். நடிகர் பாக்யராஜ்,பின்னணி பாடகியர், சுசிலா, எல்.ஆர்.ஈஸ்வரி,வசனகர்த்தா ஆரூர் தாஸ், பாடலாசிரியர்கள்கவிஞர் முத்துலிங்கம், செங்குட்டுவன், சண்டை பயிற்சியாளர் ராமகிருஷ்ணன், ஒப்பனை கலைஞர்ராமமூர்த்தி ஆகியோருக்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.தமிழ்நாடு பொன் விழாவையொட்டி, நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ – மாணவியருக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன. தென் மாவட்டங்களிலிருந்து வாகனங்களில் வந்தவர்கள், விமான நிலையம் அருகே, சாலையோரம் வாகனங்களை நிறுத்தினர். வாகனங்கள் மீதேறி, விமான நிலைய ஓடுதளத்தில், விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதை, ஆவலோடு பார்த்தனர். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள், ஏராளமானோர், ‘மெட்ரோ’ ரயிலில் பயணித்தனர். பிற மாவட்டங்களில் இருந்து வந்தோரும், மெட்ரோ ரயிலில், ‘ஜாலி’யாக பயணம் செய்து ரசித்தனர். இதனால், வழக்கத்தை விட, மெட்ரோ ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.