பாக்., அரசின் உண்மை முகம் வெளிப்பட்டது
பாகிஸ்தான் பிரதமராக பொறுப்பேற்றுள்ள இம்ரான் கான், அமைதி பேச்சை துவக்க வேண்டும் என கடந்த மாதம் இந்தியாவுக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் பாக்., ராணுவத்தின் அத்துமீறிய தாக்குதலால் இந்திய வீரர்கள் தொடர்ந்து கொல்லப்பட்டு வருவதால், இம்ரான் கானின் அழைப்பை ஏற்க இந்தியா மறுத்து விட்டது.
இந்தியா பிடிவாதமாக இருந்து அமைதி பேச்சை எதிர்த்து வருவதாக இம்ரான் கான் குற்றம்சாட்டி இருந்தார். இதற்கிடையில் கடந்த வாரம் ஐ.நா., கூட்டத்தில் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பாக்., பயங்கரவாதிகளின் புகலிடமாக திகழ்வதாகவும், மும்பை தாக்குதல் குற்றவாளி ஹபீஸ் சையது பாக்.,கில் சுதந்திரமாக உலாவுவதாகவும் குற்றம்சாட்டி இருந்தார்.
இந்நிலையில் நேற்று இஸ்லாமாபாத்தில் பயங்கரவாதி ஹபீஸ் சையது தலைமையில் கூட்டம் ஒன்று நடந்தது. இது அனைத்துக்கட்சி கூட்டம் என கூறப்பட்டாலும், இதில் வைக்கப்பட்டிருந்த பேனரில், பாக்., பாதுகாப்பு, காஷ்மீர், இந்தியாவின் மிரட்டல்கள் குறித்த ஆலோசனை கூட்டம் என குறிப்பிடப்பட்டிருந்தது. பயங்கரவாதி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் பாகிஸ்தானின் மத விவகாரங்கள் மற்றும் மத நல்லிணக்க துறை அமைச்சர் நூர் உல் ஹக் குதாரி கலந்து கொண்டார்.
இந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி சர்ச்சையை கிளப்பி உள்ளது. அமைதி பேச்சு வார்த்தைக்கு இந்தியாவிற்கு அழைப்பு விடுத்த இம்ரான் கான், பயங்கரவாதி தலைமையில் நடந்த கூட்டத்திற்கு தனது அமைச்சரை அனுப்பி உள்ளதற்கு கண்டனங்களும் எழுந்து வருகின்றன.