இன்ஜினீயர் வீட்டுக்குள் நள்ளிரவில் நுழைந்த இன்ஸ்பெக்டர்! – மிரட்டி வாங்கப்பட்ட ரூ.10 லட்சம் ‘செக்’
72 வயதாகும் இன்ஜினீயர் வீட்டுக்குள் நள்ளிரவில் இன்ஸ்பெக்டர், மாடலிங் பெண், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிப் பிரமுகர் ஆகியோர் நுழைந்து பத்து லட்சம் ரூபாய்க்கான செக்கை மிரட்டி வாங்கியதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை கிழக்குத் தாம்பரம், இரும்புலியூர் திலகவதி நகரைச் சேர்ந்தவர் முத்தையா. சிவில் இன்ஜினீயர். 72 வயதாகும் இவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்ஸ்பெக்டர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிப் பிரமுகர், அவரின் மனைவி மீதும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து முத்தையா கூறுகையில், “நான் கட்டுமானத் தொழில் செய்துவந்தேன். வயது முதிர்வு காரணமாக என் மகன் கிறிஸ்டோபருடன் குடியிருந்து வருகிறேன். கடந்த 29.9.2018-ல் நள்ளிரவில் என் மகனுக்குத் தெரிந்தவர்கள் எனக் கூறிக்கொண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் தாம்சன், தாம்பரத்தைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த பாண்டியன், அவரின் மனைவி டி.வி. நடிகை சஜினி ஆகியோர் வந்தனர். அவர்கள், வீட்டிலிருந்த எங்களிடம் அநாகரிகமாக நடந்துகொண்டனர். மேலும், பத்து லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டினர். உடனே நான் காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100-க்கு போன் செய்ய முயன்றேன். அப்போது கத்தியை எடுத்து என் கழுத்தில் வைத்து, நீ காவல்துறைக்கோ அல்லது வேறு யாருக்காவது தகவல் தெரிவித்தால் கழுத்தை அறுத்துவிடுவேன்’ என்று மிரட்டினர்.
`நான் ஒரு இன்ஸ்பெக்டர். என்னை மீறி இங்கு எந்த காவல் அதிகாரியும் செயல்பட முடியாது’ என்று கூறினர். உடனே நான், `உங்களுக்கு ஏன் பணம் தரவேண்டும்’ என்று கேட்டதற்கு, `உன் மகன் உயிரோடு வேண்டும் என்றால் உடனடியாக பணத்தைக் கொடு’ என்று மிரட்டினர். அதோடு, `ஆந்திர எல்லையில் உன் மகனை எரித்து அடையாளம் தெரியாமலாக்கிவிடுவேன்’ என்று கூறினர். மேலும், என்னையும் என் மனைவியையும் அடித்துக் கொலை செய்துவிட்டு தற்கொலை போல மாற்றிவிடுவேன் என்று கூறினர். இதனால் உயிருக்குப் பயந்து 10 லட்சம் ரூபாய்க்கு செக் கொடுத்தேன். இன்ஸ்பெக்டர் தாம்சனுடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த பாண்டியன், அவரின் மனைவி டிவி நடிகை சஜினி ஆகியோர் வந்தனர். சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து என்னையும் என் குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டும்” என்றார் கண்ணீர்மல்க.
முத்தையாவின் மகன் எட்வின் கிறிஸ்டோபர் கூறுகையில், “இன்ஸ்பெக்டர் தாம்சனை அரசியல் பிரமுகர் ஒருவர் வீட்டுக்குச் சென்றபோதுதான் சந்தித்தேன். அதன்பிறகு அவருக்கு பல உதவிகளைச் செய்துள்ளேன். அவரிடம் நான் கடனாக பணம் வாங்கவில்லை. நான் வீட்டில் இல்லாத சமயத்தில் வீட்டுக்குள் வந்த தாம்சன், பாண்டியன், சஜினி ஆகியோர் அப்பாவையும் அம்மாவையும் மிரட்டி 10 லட்சம் ரூபாய்க்கான செக்கை வாங்கிச் சென்றுள்ளனர்” என்றார்.
தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த பாண்டியனிடம் பேசினோம். “என் மனைவி சஜினி, மாடலிங்கில் இருக்கிறார். அவர், டிவி நடிகையெல்லாம் கிடையாது. சஜினியின் உறவினர்தான் முத்தையா. மேலும், தாம்சன் எனக்கு நீண்ட காலமாக தெரிந்தவர். தாம்சனிடமிருந்து முத்தையாவின் மகன் எட்வின் கிறிஸ்டோபர் 8 லட்சம் ரூபாய் கடனாக வாங்கியுள்ளார். ஆனால் அந்தப் பணத்தை கிறிஸ்டோபர் திரும்ப கொடுக்கவில்லை. அதைத்தான் கேட்கச் சென்றோம். ஆனால், அவர்களை நாங்கள் மிரட்டவில்லை. மிரட்டி யாராவது ‘செக்’ வாங்குவார்களா” என்றார்.
சஜினி நம்மிடம், “இன்ஸ்பெக்டர் தாம்சன், எங்களுக்கு பத்து லட்சம் ரூபாய் தரவேண்டும். அவரிடம் நாங்கள் பணம் கேட்டபோது எட்வின் கிறிஸ்டோபர் பணம் தராமல் ஏமாற்றுவதை எங்களிடம் கூறினார். சம்பவத்தன்றுகூட தாம்சன் சார் மட்டும்தான் வீட்டுக்குள் சென்று பணம் கேட்டார். நான், வீட்டின் வெளியில்தான் இருந்தேன். மாமா முத்து, அத்தை ஜெயா ஆகியோர்தான் என்னை வீட்டுக்குள் அழைத்துச் சென்று தாம்சனிடம் பேசச் சொன்னார்கள். ஆனால், என்னையும் என் கணவரையும் தேவையில்லாமல் இந்தப் புகாரில் சேர்த்துள்ளனர். அவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பேன். நான் மாடலிங்கில் இருந்துவருகிறேன். ஆனால், என்னை டி.வி. நடிகை என்று குறிப்பிட்டுள்ளனர். பல உதவிகளைச் செய்த இன்ஸ்பெக்டர் தாம்சன் மீது முத்தையா புகார் கொடுத்துள்ளார்” என்றார்.
இன்ஸ்பெக்டர் தாம்சனை தொடர்புகொண்டபோது அவர் பதிலளிக்கவில்லை.