சென்னையில் மிக விரைவில் 80 மின்சார பஸ்கள் இயக்கப்படும்
வாகன ஓட்டுநர் உரிமத்துக்கு ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்தும் முறையை தொடங்கி வைத்த போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சென்னையில் மிக விரைவில் 80 மின்சார பஸ்கள் இயக்கப்படும் என்று கூறினார்.
ஓட்டுநர் உரிமம் பெற ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்தும் முறையை சென்னை கே.கே.நகரில் நேற்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கிவைத்தார். பின்னர் இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
வீட்டில் இருந்தபடியே பணம் செலுத்திவிட்டு, முன்அனுமதி பெற்று வந்தால், உடனடியாக ஒரு மணி நேரத்தில் ஓட்டுநர் உரிமம் கையில் கிடைப்பதற்கான நடவடிக்கைகளை நாங்கள் எடுத்திருக்கிறோம். அதேபோல இனிவரும் காலங்களில் தமிழகத்தில் உள்ள அனைத்து போக்குவரத்து துறை அலுவலகங்களிலும் ஆர்.சி. புத்தகத்தை ‘ஸ்மார்ட் கார்டு’ திட்டத்தில் பெறும் வசதியை அ.தி.மு.க. அரசு கொண்டுவந்துள்ளது. மிக விரைவில் தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்பட இருக்கிறது. இதனால், போக்குவரத்து துறையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்கள் குறையும்.
அதுமட்டுமல்லாமல், முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இருந்தபோது தமிழகத்தில் 14 இடங்களில் ‘ஆட்டோமெட்டிக் டெஸ்டிங் டிராக்’ கொண்டுவருவோம் என்று கூறியிருந்தார். அதை முதன் முதலாக கரூர் மாவட்டத்தில் நாங்கள் கொண்டு வந்திருக்கிறோம்.
பெரிய மாநிலமாக தமிழகம் இருக்கும் காரணத்தால், வாகன எண்ணிக்கையில் இந்திய அளவில் தமிழ்நாடு 2-வது இடத்தில் இருக்கிறது. அதனால் ஏற்படக்கூடிய விபத்துகளை குறைப்பதற்கும், பொதுமக்களுக்கு சிறப்பான சேவையை செய்வதற்கும் போக்குவரத்து துறை முனைப்போடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
தீபாவளி பண்டிகைக்கு பொதுமக்கள் சிரமம் இல்லாமல் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுவர 22 ஆயிரம் அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட இருக்கிறது. 100 மின்சார பஸ்களை வாங்க லண்டனுக்கு நாங்கள் சென்றிருந்தோம். அதில் 80 பஸ்களை சென்னையிலும், 20 பஸ்களை கோவையிலும் இயக்க உத்தேசிக்கப்பட்டிருக்கிறது. மிக விரைவில் மின்சார பஸ்கள் சென்னையில் இயக்கப்படும். விரைவில் போக்குவரத்து துறையையும், மெட்ரோ ரெயில் துறையையும் இணைந்து ‘கேஸ் லெஸ் கார்டு’ திட்டத்தை கொண்டுவர இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.