தமிழகத்தில் காவிரி டெல்டா உள்ளிட்ட 3 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு முடிவு
பூமிக்கு அடியில் இயற்கையாக இருக்கும் ஹைட்ரஜன் மற்றும் கார்பன் வாயுக்களின் கூட்டுப்பொருளே ஹைட்ரோ கார்பன் என அழைக்கப்படுகிறது.
இந்த கூட்டுப்பொருள் ஆக்சிஜனுடன் சேரும்போது எந்திரங்களை இயக்கும் சக்தி கிடைக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கப்பட்டு வந்தது. அதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியதால் அங்கு தற்காலிகமாக அந்த திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் இந்தியாவில் ஹைட்ரோ கார்பன் இருக்கும் இடங்களை ஆய்வு செய்து, அதை எடுக்க விரும்பும் நிறுவனங்களுக்கு அதற்கான உரிமத்தை வழங்க மத்திய அரசு தயார் ஆனது.
இதன் அடிப்படையில் முதல்கட்டமாக தமிழ்நாட்டில் 3 இடங்கள் உள்பட நாடு முழுவதும் 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ஓ.என்.ஜி.சி.) உள்பட 9 நிறுவனங்கள் போட்டியிட்டன.
இந்த போட்டியில் ஓ.என்.ஜி.சி. மற்றும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நடத்தும் வேதாந்தா நிறுவனம் உள்பட 6 நிறுவனங்கள் வெற்றி பெற்றன.
இந்த நிறுவனங்களுக்கு ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான உரிமத்தை ஒப்பந்தம் செய்யும் நிகழ்ச்சி டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் கலந்து கொண்டார். அவரது முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து ஆனது.
நிகழ்ச்சியில் பெட்ரோலியத்துறை செயலாளர் எம்.எம்.குட்டி, ஹைட்ரோ கார்பன் திட்ட இயக்குனர் வி.பி.ஜாய் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்த ஒப்பந்தத்தின்படி, அதிகபட்சமாக 41 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான உரிமத்தை வேதாந்தா நிறுவனம் பெற்றது. இந்த 41 இடங்களில் தமிழ்நாட்டில் காவிரி டெல்டாவில் உள்ள நாகை மாவட்டம் கமலாபுரம் உள்பட 2 இடங்கள் இடம்பெற்றுள்ளன. அவை காவிரி, கடலோடு கலக்கும் கடலோர பகுதி ஆகும். இதில் ஒரு இடத்தில் 1,794 சதுர கி.மீ. பரப்பிலும், மற்றொரு இடத்தில் 2,574 சதுர கி.மீ. பரப்பிலும் ஹைட்ரோ கார்பன் எடுக்கப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஓ.என்.ஜி.சி. உரிமம் பெற்றுள்ளது. அங்கு 731 சதுர கி.மீ. பரப்பில் ஹைட்ரோ கார்பன் எடுக்கப்பட உள்ளது. அது நிலப்பகுதி ஆகும்.
மேற்படி 55 இடங்களின் மொத்த பரப்பளவு 59 ஆயிரத்து 282 சதுர கி.மீ. ஆகும். இந்த பரப்பு, ஏற்கனவே ஹைட்ரோ கார்பன் எடுக்கப்பட்டு வரும் இடங்களின் பரப்பளவில் 65 சதவீதம் ஆகும்.
இந்நிகழ்ச்சியில், பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் பேசியதாவது:-
ஹைட்ரோ கார்பன் எடுக்க உரிமம் பெற்றுள்ள நிறுவனங்களுக்கு வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களுக்கு மத்திய அரசு முழு ஆதரவும், உதவியும் அளிக்கும். இந்த நிறுவனங்கள், ரூ.6 ஆயிரம் கோடி முதலீடு செய்ய உறுதி பூண்டுள்ளன. இந்த பணி, இந்திய பொருளாதாரத்தில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும்.
இந்த அரசு ஒளிவுமறைவின்றி செயல்பட்டு வருகிறது. அனைத்து தரப்பினருடனும் ஆலோசித்த பிறகு கொள்கைகள் வகுக்கப்படுகின்றன. குறைந்தபட்ச அரசு-அதிகபட்ச நிர்வாகம் என்பது வெறும் கோஷம் மட்டுமல்ல, வழிகாட்டும் கொள்கை ஆகும்.
உலகிலேயே அதிகமான எரிசக்தி உபயோகப்படுத்தும் நாடுகளில் 3-வது இடத்தை இந்தியா பெற்றுள்ளது. மக்களுக்கு மலிவான விலையில் எரிசக்தியை அளிக்க அரசு உறுதி பூண்டுள்ளது. அதற்காகவே, உள்நாட்டு ஹைட்ரோ கார்பன் உற்பத்தியை பெருக்க இத்தகைய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
தமிழ்நாட்டில் காவிரி படுகை கடற்பகுதியின் 2 இடங்களில்தான் வேதாந்தா குழுமம் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் என்பதால், பிரச்சினை வராது.
இவ்வாறு அவர் பேசினார்.
ஒப்பந்தம் கையெழுத்து ஆகும் நிகழ்ச்சியில் வேதாந்தா குழும தலைவர் அனில் அகர்வாலும் கலந்து கொண்டார்.
அவர் நிருபர்களிடம் கூறுகையில், “ஹைட்ரோ கார்பனின் முக்கியத்துவத்தை பலரும் அறிந்து இருக்கவில்லை. பலரும் எதிர்த்து வருகிறார்கள். ஸ்டெர்லைட் ஆலை மிகவிரைவில் திறக்கப்படும் என்று நம்பிக்கை உள்ளது” என்றார்.
ஹைட்ரோ கார்பன் எடுக்கும் புதிய திட்டத்திற்கு தமிழக தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் 3 இடங்கள் உள்பட நாடு முழுவதும் மொத்தம் 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் வளங்களை எடுப்பதற்கான உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. காவிரி பாசன மாவட்டங்களின் வளமையை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகத் தான் அப்பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறேன்.
ஆனால், அதை செய்யாமல் காவிரி பாசன மாவட்டங்களை சீரழிப்பதற்காக மீத்தேன் மற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை அடுத்தடுத்து அறிவித்து வருகிறது. மக்களின் உணர்வுகளை மதிக்காமல் அறிவிக்கப்பட்டுள்ள இந்த திட்டங்களை நிச்சயமாக செயல்படுத்த முடியாது. இதை மத்திய அரசு உணர்ந்து கொண்டு ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கவுரவமாக திரும்பப்பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் திருவாரூரில் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஹைட்ரோ கார்பன், ஷேல் கியாஸ் எடுப்பதற்கு அனுமதி அளிக்கும் ஒப்பந்தத்தில் மத்திய அரசு கையெழுத்திட்டுள்ளது. இந்த திட்டம் தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் 3 இடங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கு விவசாயிகள் சார்பில் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்துகொள்கிறோம். இந்்த திட்டங்களால் காவிரி படுகைகள் பாலைவனமாக மாறும். எனவே காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்.
எனவே விவசாயிகள் தங்கள் எதிர்ப்பை மத்திய அரசிற்கு தெரிவிக்கும் வகையில் நாளை(புதன்கிழமை) திருவாரூருக்கு வருகை தரும் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று விழுப்புரத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் டெல்டா பகுதியில் 3 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்து, அதற்கான ஒப்பந்த நிறுவனங்களையும் தேர்வு செய்ததாக செய்திகள் வருகிறது. இதனை எதிர்த்து நெடுவாசலில் பல மாதங்கள் போராட்டம் நடந்தது. பல அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர். மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இந்த திட்டத்துக்கு மக்கள் எதிர்ப்பு இருந்தால் நிச்சயமாக செயல்படுத்தப்படமாட்டாது என உறுதி அளித்தார். ஆனால் மக்களை ஏமாற்றிவிட்டு தற்போது இந்த திட்டத்தை தொடங்கவுள்ளனர். இதனை நிறைவேற்றினால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகி விடும். இதனை ஒருபோதும் டெல்டா மாவட்ட மக்கள் ஏற்க மாட்டார்கள். அதனை மீறி ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தொடங்கினால் டெல்டா மாவட்டங்கள் போர்க்களமாக மாறும்.
இவ்வாறு அவர் கூறினார்.