இந்திய அணியை சொந்த மண்ணில் எதிர்கொள்வது சவாலான விஷயம்: மேற்கிந்தியத் தீவுகள் அணி பயிற்சியாளர் ஸ்டூவர்ட் லா பேட்டி
இந்திய கிரிக்கெட் அணியை அதன் சொந்த மண்ணில் எதிர் கொள்வது சவாலான விஷயம் என்று மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பயிற்சியாளர் ஸ்டூவர்ட் லா தெரிவித்தார்.
மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 5 ஒரு நாள், 3 டி20 போட்டிகளில் விளையாட வுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி அக்டோபர் 4-ம் தேதி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டிலுள்ள மைதானத்தில் தொடங்கவுள்ளது.
இந்த நிலையில் ராஜ்கோட்டில் இதுகுறித்து செய்தியாளர்களுக்கு ஸ்டூவர்ட் லா அளித்த பேட்டி:
டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை யில் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது. நாங்கள் 8-வது இடத்தில் உள்ளோம். இங்கிலாந்து தொடரில் இந்தியா சரியாக விளையாட வில்லை. அதுகுறித்து நாங்கள் அதிகமாக பேசிவிட்டோம். தற் போது 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியாவுடன் விளையாடவுள்ளோம்.
இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் எதிர்த்து விளை யாடுவது என்பது மிகவும் சவாலான விஷயம். இது அனை வருக்கும் தெரியும். இந்தியாவுக்கு வந்து விளையாடும் அணிகள் பெரும்பாலும் டெஸ்ட் போட்டி களில் வெல்வது இல்லை. எனவே எங்களுக்கு மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது. இருந்தபோதும் இந்திய அணியை எதிர்த்து திறமையை நிரூபிப்போம்.
இந்தியாவுக்கு வருவதற்கு முன்பு துபாயில் சில நாட்கள் பயிற்சி பெற்று வந்துள்ளோம். அது எங்களுக்கு உதவும். அதேபோல வடோதராவில் நடைபெற்ற பயிற்சிப் போட்டியும் எங்களுக்கு சிறப்பானதாக அமைந்தது.
இது எங்களுக்கான நேரம். எங்கள் திறமையை நிரூபிக்க நல்ல வாய்ப்பு. அதை நாங்கள் பயன்படுத்துவோம். இந்தியா மட்டுமல்லாமல் மற்ற அனைத்து நாடுகளிலும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சிறப்பாக விளையாடி வருகிறார். அவர் ஒரு மிகச்சிறந்த வீரர்.
இவ்வாறு அவர் கூறினார்.
கெமார் ரோச் காயம்
மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளர் கெமார் ரோச் காயமடைந்துள்ளதால், முதல் டெஸ்ட் போட்டியில் அவர் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.