“ஊனமுற்றவர்கள் லக்கேஜ் மாதிரி”.. டிஆர்பிக்காக இப்படியெல்லாமா டயலாக் வைப்பீர்கள்?
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அரண்மனைக்கிளி சீரியலின் வசனங்கள் ஊனமுற்றவர்களை காயப்படுத்தும் வகையில் உள்ளன. கடந்த வாரம் திங்கள் முதல் விஜய் டிவியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பப்பட்டு வருகிறது அரண்மனைக் கிளி சீரியல். வீட்ல விஷேசங்க படத்தில் பாக்யராஜால் அறிமுகப்படுத்த பிரகதி இச்சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த சீரியலின் புரொமோ வீடியோக்களே பலரும் முகத்தை சுளிக்க வைக்கும் விதத்தில் இருந்தது.
ஓட்டக் காலான் : அதாவது, இளம்பெண் ஒருவர் தனது செல்ல ஆட்டை ஓட்டக் காலான் என அழைப்பது போலவும், மற்றொரு காட்சியில் கால் ஊனமுற்ற மாற்றுத்திறனாளி நாயகனை அவனது எதிராளிகளும் ஓட்டக் காலான் எனக் குறிப்பிடுவது போலவும் இருந்தது. ஊனம் என்பது உடல் உறுப்புகளில் இல்லை, மனதில் தான் இருக்கிறது. உடல் குறைபாடு உள்ளவர்கள் நிச்சயம் ஏதாவது ஒரு துறையில் தலைசிறந்தவர்களாகத் தான் இருப்பார்கள். எனவே தான் உடல் ஊனமுற்றவர்களை அரசே மாற்றுத்திறனாளி என அழைக்கிறது.
மாற்றுத்திறனாளி நாயகன்: ஆனால், தொடர்ந்து இந்த சீரியலில் மாற்றுத்திறனாளிகள் இயல்பானவர்கள் அல்ல, கோபக்காரர்கள் என்பது போன்ற காட்சி அமைப்புகள் இந்த சீரியலில் தொடர்ந்து வருகின்றன. அதோடு நேற்றைய எபிசோடில் மாற்றுத்திறனாளி நாயகனை மணந்து கொள்ள அவரது சிறுவயது தோழியே மறுப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன
மோசமான டயலாக்குகள்: அதில் அப்பெண் பேசும் வசனங்கள் அப்பப்பா.. ‘எந்தவொரு சராசரி பெண்ணும் உங்கள் மகனுடன் எதிர்பார்த்த வாழ்க்கையை வாழ இயலுமா? ஒரு செல்பி கூட நாங்க சேர்ந்து எடுக்க முடியாது. அப்படி ஏற்ற இறக்கம் உள்ளது. என் தந்தையின் தொழிலை விரிவு படுத்த விரும்புகிறேன். அதற்கு என்னுடன் நாடுநாடாக சுற்றும் கணவர் வேண்டும்.
மனைவியா நர்சா? உங்கள் மகனை திருமணம் செய்து கொண்டால், அவருக்கு மனைவியாக இருக்க முடியாது, ஒரு நர்சாகத் தான் இருக்க வேண்டும். உங்கள் மேலிருக்கும் லக்கேஜை என் மீது இறக்கி வைக்கப் பார்க்கிறீர்கள்’ என இப்படியாக நீள்கிறது அந்த வசனங்கள். கதைப்படி அப்பெண் சிறுவயது முதல் நாயகனின் தோழியாக பள்ளிக் கல்லூரிகளில் படித்தவர். மாற்றுத்திறனாளியுடன் நட்பாக இருக்க முடியும் ஆனால், துணைவியாக இருக்க முடியாது என்பது போல் இருந்தது இந்த வசனங்கள்.
செல்பிக்காகத் தான் திருமணமா? ஊடகம் என்பது பலமான ஆயுதம். அதன் மூலம் மக்களுக்கு சென்றடையும் கருத்துக்கள் ஆக்கப்பூர்வமானதாக இருக்க வேண்டும். அதை விடுத்து டிஆர்பிக்காக இப்படியான வசனங்களை பயன்படுத்துவதை சம்பந்தப்பட்டவர்கள் தவிர்க்க வேண்டும். செல்பி எடுப்பது தான் கணவன், மனைவி உறவுக்கான அடிப்படை அம்சமா. செல்பி எடுக்கக்கூடாத லாயக்கில்லாதவர்களை திருமணமே செய்து கொள்ளக் கூடாதா.
மாற்றுத்திறனாளி தொழிலதிபர்கள்: அதேபோல், தொழிலில் மாற்றுத்திறனாளிகளால் சாதிக்க இயலாதா? உலகம் முழுவதும் சுற்றி தங்கள் தொழிலை விரிவு செய்ய முடியாதா? தொழில்நுட்ப வளர்ச்சியால் உலகமே கைக்குள் அடங்கிவிட்ட நிலையில் உடல் குறைப்பாடெல்லாம் இங்கு பிரச்சினையேயில்லை.
மன உளைச்சல்: ஒரு சீரியலுக்காக இவ்வளவு தூரம் நாம் ஆதங்கப்பட வேண்டுமா, கோபப்பட வேண்டுமா எனக் கேட்கலாம். நிச்சயமாக. ஏனென்றால், இந்த சீரியலைப் பார்ப்பவர்களில் எத்தனையோ மாற்றுத்திறனாளிகள் இருப்பார்கள், எத்தனையோ இளம்பெண்கள் இருப்பார்கள். அவர்கள் மனதில் இது போன்ற தவறான கருத்துக்களை விதைப்பது தவறு. சம்பந்தப்பட்டவர்களுக்கு அது மன உளைச்சலை ஏற்படுத்தலாம்.
வனம் அவசியம்: எனவே, சீரியலாகட்டும், சினிமாவாகட்டும் இது போன்ற வசனங்களை வைப்பதற்கு முன் வசனகர்த்தாக்கள் நன்கு யோசிக்க வேண்டும். அப்பெண் நாயகனை திருமணம் செய்து கொள்ள மறுப்பதற்கு அவனது கோபத்தைக்கூட காரணமாகக் கூறி இருக்கலாம். ஆனால், நாயகன் மீது பரிதாபம் ஏற்பட வேண்டும் என்பதற்காக இப்படியா மனச்சாட்சி இல்லாமல் வசனம் எழுதுவது.