Breaking News
கணவன் – மனைவி பிரிய 6 மாதம் காத்திருக்க தேவையில்லை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

கணவன் மனைவி இருவரும் நண்பர்களாக பிரிய 6 மாதங்கள் காத்திருக்க தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

குஜராத் மாநிலம் ஆனந்த் என்ற பகுதியைச் சேர்ந்த ஆகாங்ஷா உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அவருக்கும் அவரது கணவர் அனுபம் மாத்தூருக்கும் இடையே விவாகரத்து வழக்கு ஆனந்த் தலைமை நீதித்துறை நடுவர் முன்பாக நிலுவையில் உள்ளது. இந்நிலையில், புதுடெல்லி துவாரகா நீதிமன்றத்தில் தொடரப் பட்ட இன்னொரு மனுவை ஆனந்த் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று ஆகாங்ஷா கூறியிருந்தார். இந்த மனுவின் ஒரு பகுதியாக தனக்கும் தன் கணவருக்கும் இடையே சுமூகமாக பிரிவது குறித்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

இதை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குரியன் ஜோசப், சஞ்சய் கிஷன் கவுல் அடங்கிய அமர்வு அளித்துள்ள தீர்ப்பில் கூறியிருப்பதாவது:

இந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு நிலுவையில் உள்ளபோதே, கணவன் மனைவி இருவருக்கும் இடையே சுமூக பிரிவு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து இருவரும் இணைந்து மனு தாக்கல் செய்துள்ளனர். இருவரும் நன்கு படித்தவர்கள். இருவரிடமும் நாங்கள் விரிவான ஆலோசனை நடத்தினோம். அவர்கள் இருவரும் நண்பர்களாக பிரிவது என்று நல்ல சுயசிந்தனையுடன் முடிவு எடுத்துள்ளதை அறிகிறோம். இந்நிலையில், இந்து திருமணச் சட்டம், பிரிவு 13(பி)-யின் படி அவர்கள் விவாகரத்திற்காக 6 மாதங்கள் காத்திருப்பது தேவையற்றது. எனவே, இந்த காத்திருப்பு காலம் தள்ளுபடி செய்யப்படுகிறது. அவர்கள் திருமணம் ரத்து செய்யப்படுகிறது. இருவரும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், ரூ.12 லட்சத்து 50 ஆயிரத்தை ஆகாங்ஷா பெற்றுக் கொண்டார். இருவர் மீதும் உள்ள துவாரகா நீதிமன்ற வழக்கு மற்றும் ஆனந்த் நீதிமன்ற வழக்குகள் ரத்து செய்யப்படுகின்றன.

இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.கோயல், யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த ஆண்டு விவாகரத்து தொடர்பான ஒரு வழக்கில், 6 மாத காத்திருப்பு தேவையில்லை என்று நீதிமன்றம் கருதினால், அதிலிருந்து விலக்கு அளிக்கலாம் என்று உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவின் அடிப்படையில் தற்போது புதிய தீர்ப்பு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.