சராசரியாக ரூ.71 லட்சம், 4 ஆண்டுகளில் ரூ.1,997 கோடி: எம்.பி.க்களின் ஊதியம் குறித்து ஆர்டிஐயில் தகவல்
கடந்த 4 ஆண்டுகளில் நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவையின் 790 எம்.பி.க்களுக்கு ஊதியமாக ரூ. ஆயிரத்து 997 கோடி வழங்கப்பட்டுள்ளது என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரியவந்துள்ளது.
கடந்த 4 ஆண்டுகளில் மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்களுக்கு வழங்கப்பட்ட ஊதியம் குறித்து மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சந்திர சேகர் கவுட் என்ற ஆர்டிஐ அலுவலர் நாடாளுமன்ற செயலாளரிடம் ஆர்டிஐயின் கீழ் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதற்கு அவருக்குப் பதில் அளிக்கப்பட்டுள்ளது.
மக்களவையில் தற்போது மொத்தம் 545 எம்.பி.க்கள் உள்ளனர். இதில் நியமன எம்.பி.கள் இருவர் தவிர்த்து 543 பேர் மக்களால் தேர்வு செய்யப்படுபவர்கள், மாநிலங்களவையில் 245 எம்.பி.க்கள் என மொத்தம் 790 எம்.பி.க்கள் உள்ளனர்.
இவர்களில் மக்களவை எம்.பி. ஒருவருக்குச் சராசரியாக ஆண்டுக்கு 71 லட்சத்து 29 ஆயிரத்து 390 ரூபாய் ஊதியமாகத் தரப்படுகிறது. மாநிலங்களவை எம்.பி. ஒருவருக்கு 44 லட்சத்து 33 ஆயிரத்து 682 ரூபாய் ஊதியமாக வழங்கப்படுகிறது.
ஒட்டுமொத்தமாக மக்களவை எம்.பி.க்களுக்கு கடந்த 4 ஆண்டுகளில் 1,554 கோடி ரூபாய் ஊதியமாகத் தரப்பட்டுள்ளது. மாநிலங்களவை எம்.பி.க்களுக்கு 443 கோடி ரூபாய் ஊதியமாக 4 ஆண்டுகளில் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஜனநாயகத்துக்கான சீரமைப்பு அமைப்பின் நிறுவனர் ஜகதீஷ் சோக்கர் கூறுகையில், ”எம்.பி.க்களுக்கு ஆண்டுதோறும் அளிக்கப்படும் ஊதியத்தின் அளவு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இது மறு ஆய்வு செய்யப்பட வேண்டும். எம்.பி.க்களின் ஊதியம் 10 மடங்கு உயர்த்தப்பட்டாலும் யாருக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், எம்.பி.க்களுக்கு உயர்த்தப்படும் ஊதியம் போல், மக்களின் அடிப்படை வசதிகளான போக்குவரத்து, வீடு, வாகனம், உணவு, மருத்துவம், சுத்தமான காற்று, தொலைத்தொடர்பு போன்றவற்றில் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை” எனத் தெரிவித்தார்.