தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவர இந்திய கிரிக்கெட் வாரியம் கடும் எதிர்ப்பு
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு பிசிசிஐ கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), ஒரு அரசு சாரா ஒரு தனியார் அமைப்பு என்று கூறிக்கொண்டு வருகிறது. மேலும் உலகிலேயே அதிக வலிமை வாய்ந்த விளையாட்டு அமைப்பாகவும், கோடிக்கணக் கான சொத்துகளை கொண்ட அமைப்பாகவும் உள்ளது.இருந்த போதும், இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் மூவர்ண நிறம் தாங்கிய தேசிய சீருடையை அணிந்து, அசோகா சக்கரம் பொறிக்கப்பட்ட ஹெல்மெட்டுடன் அனைத்து சர்வதேச கிரிக்கெட் போட்டி களிலும் பங்கேற்று வருகிறார்கள்.
கிரிக்கெட்டை பொருத்தவரை தேசத்தின் பிரதிநிதியாக இருக்கும் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள், கிரிக்கெட் வாரிய நிர்வாகம் தொடர் பாக கேள்வி எழுப்பும் நேரங்களில் தங்களை தனியார் அமைப்பு, எங்களை யாரும் கட்டுப்படுத்த இயலாது, நாங்கள் கேள்விக்குப் பதில் அளிக்கக் கடமைப்பட்டவர் கள் இல்லை என வெளிப்படையாக தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், பிசிசிஐ-யை தகவல் அறியும் உரிமை சட்டத் துக்குள் மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) கொண்டு வந்துள்ளது. இதன்மூலம், கிரிக்கெட் வீரர்களின் ஊதியம், வாரியத்தின் ஆண்டு வரு மானம், எத்தனை ஆண்டு கால ஒப்பந்தம், வீரர்கள் தேர்வு செய்யப்படும் முறை பற்றிய பொதுமக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க கடமைப்பட்டுள்ளது பிசிசிஐ.
ஹாக்கி, வாலிபால் உள்ளிட்ட தேசிய விளையாட்டு அமைப்புகள் அனைத்தும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுவிட்டன. இந்த நிலையில் கிரிக்கெட் வாரியத்தையும் ஏன் அதன் கீழ் கொண்டு வரக்கூடாது என்று கேள்வி எழுப்பிய சட்ட ஆணையம், 1997-ம் ஆண்டில் இருந்து 2007-ம் ஆண்டு வரை பிசிசிஐ, மத்திய அரசிடம் இருந்து ரூ.2,168 கோடிக்கு வரிச்சலுகை பெற்றிருப்பதை குறிப்பிட்டது. மேலும் பிசிசிஐ-யை தகவல் அறி யும் உரிமை சட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என மத்திய சட்ட அமைச்சகத்துக்கு சட்ட ஆணையம் பரிந்துரை செய்தது. இதையடுத்து சிஐசி இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் பிசிசிஐ கொண்டு வரப்பட்ட நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. தற்போது நிர்வாகக் கமிட்டியின் (சிஓஏ) கட்டுப்பாட்டில் பிசிசிஐ இயங்கி வருகிறது.
இந்த முடிவு குறித்து பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறிய தாவது: சிஐசி உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதுதான் எங்களுக்கு இருக்கும் ஒரே வழி. இவ்வாறு அவர் கூறினார்.