வரி மன்னன் இந்தியா; என்னை சந்தோஷப்படுத்த ஆர்வமாக இருக்கிறார்கள்: ட்ரம்ப் கிண்டல்
அமெரிக்கப் பொருட்களுக்கு இந்திய அரசு கடுமையான வரியை விதிக்கிறது, என்னை எப்போதும் சந்தோஷமாக வைத்திருக்கவே, எங்கள் நாட்டுடன் வர்த்தகம் செய்ய இந்தியா விரும்புகிறது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கிண்டலாகத் தெரிவித்தார்.
வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேற்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது இந்தியா குறித்து கடுமையாக விமர்சித்தும், குற்றம் சாட்டியும் கிண்டல் செய்தும் பேசினார்.
அவர் கூறியதாவது:
”அமெரிக்கப் பொருட்களுக்கு இந்திய அரசு அதிகமாக வரி விதிக்கிறது. இந்தியா விதிக்கும் வரியைப் பார்த்தால் வரி மன்னன் என்றுதான் அழைக்க வேண்டும். அமெரிக்காவில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்கள், ஹார்லி டேவிட்ஸன் மோட்டார் சைக்கிள்கள் போன்றவற்றுக்கு அதிகபட்சமாக வரி விதிக்கப்படுகிறது.
நாங்கள் ஹார்லி டேவிட்ஸன் மோட்டார் சைக்கிள் அனுப்பினாலும், அல்லது வேறு எந்தப் பொருட்களை இந்தியாவுக்கு அனுப்பினாலும் இந்திய அரசு அதிகபட்சமான வரி விதிக்கிறது. இது தொடர்பாக நான் பிரதமர் மோடியிடம் பேசினேன். அவர் வரியைக் குறைப்பதாகக் கூறியிருக்கிறார்.
இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயிலான உறவு நன்றாகச் செல்கிறது. இந்தியாவின் பிரதமர் மோடி மிகச் சிறந்தவர்.
இதற்கு முன் இருந்த அதிபர்கள் இதுபோல் இந்தியர்களுடன் பேசியதில்லை. இதைப் பிரதமர் மோடியே என்னிடம் தெரிவித்துள்ளார். நான் கற்பனை செய்து எதையும் சொல்லவில்லை. இதற்கு முன் இருந்த அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதிகள் இந்தியாவிடம் பேசியதுகூட இல்லை. அதற்கு அடுத்தாற்போல் பிரேசிலிடமும் பேசியது இல்லை. அதனால்தான் வரியை தங்கள் விருப்பத்துக்கு விதிக்கிறார்கள்.
ஹார்லி டேவிட்ஸன் மோட்டார் சைக்கிளுக்கு வரி அதிகமாக இருந்தது என்று கவலை தெரிவித்தோம், அந்த வரியை இந்தியா குறைத்திருந்தாலும், அது போதாது. இன்னும் குறைக்க வேண்டும். விலை அதிகமாக இருந்தால், யார் வாங்குவார்கள்.
அமெரிக்கப் பொருட்களுக்கு தொடர்ந்து அதிகமான வரியை இந்திய அரசு விதித்தால், இந்தியப் பொருட்களுக்கும் நாங்கள் கடுமையான வரிவிதிப்பை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
அமெரிக்காவிடம் எதற்காக வர்த்தக ஒப்பந்தம் செய்ய விரும்புகிறீர்கள் என்று இந்திய அதிகாரிகளிடம் அமெரிக்க அதிகாரிகள் கேட்டார்கள். அதற்கு அமெரிக்க அதிபரை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளவே நாங்கள் வர்த்தகம் செய்கிறோம் என்று இந்திய அதிகாரிகள் தெரிவித்தார்கள்”.
இவ்வாறு ட்ரம்ப் தெரிவித்தார்.