Breaking News
அரசு ஊழியர்கள் இன்று தற்செயல் விடுப்பு போராட்டம் “சம்பளம் பிடித்தாலும் பிரச்சினை இல்லை” என திட்டவட்டம்

5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் இன்று(வியாழக்கிழமை) தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். விடுப்பு போராட்டத்தால் சம்பளம் பிடித்தாலும் பிரச்சினை இல்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத்தொகை அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மறுக்கப்படுவதை உடனே வழங்கிட வேண்டும் என்பது உள்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற நவம்பர் மாதம் 27-ந் தேதி முதல் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர்(தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பு) காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.

அதற்கு முன்னோட்டமாக ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் இன்று(வியாழக்கிழமை) ஈடுபட உள்ளனர்.

இந்த தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபடுபவர்களின் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என்று தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், அதையும் மீறி இன்று தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்த இருக்கின்றனர்.

இதுகுறித்து ஜாக்டோ- ஜியோ அமைப்பின் செய்தி தொடர்பாளர் கு.தியாகராஜன் கூறியதாவது:-

எங்கள் கோரிக்கைகளுக்காக முதல் முறையாக நாங்கள் இப்போது போராட்டம் நடத்தவில்லை. பல்வேறு கட்டங்களாக போராட்டம் நடத்தியும் எங்களை அரசு இதுவரை அழைத்து பேசவில்லை. அதன் தொடர்ச்சியாக தான், இந்த போராட்டத்தை நாங்கள் அறிவித்து அதில் ஈடுபட இருக்கிறோம்.

ஒவ்வொரு முறை போராட்டம் செய்யும்போதும் இதுபோல் எச்சரிக்கை வரத்தான் செய்யும். எங்கள் கோரிக்கைகளுக்காக ஒரு வருடம் பொறுத்துவிட்டோம். இனிமேலும் அப்படி இருக்க முடியாது. தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபடுவதால் ஒருநாள் சம்பளம் பிடித்தாலும் பிரச்சினை இல்லை. அதற்கு நாங்கள் அஞ்சப்போவதும் இல்லை. நாங்கள் எங்கள் வாழ்வாதாரத்துக்காக போராடுகிறோம்.

மொத்தம் உள்ள 10 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களில், குறைந்தது 5 லட்சம் பேராவது பங்குபெறுவார்கள். அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு அழைக்காவிட்டால், அடுத்தகட்ட வேலைநிறுத்த போராட்டத்துக்கு நாங்கள் செல்ல நேரிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.