Breaking News
நியூட்ரினோ ஆய்வு மையத்துக்கு அனுமதி: மத்திய அரசு விளக்கம் அளிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

தேனி மாவட்டம் பொட்டிபுரம் அம்பரப்பர் மலையில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் 2011–ம் ஆண்டு அனுமதி வழங்கியது. அதன் அடிப்படையில், சுமார் 2½ கி.மீ பரப்புக்கு சுரங்கம் அமைக்கும் பணிகள் தொடங்கின. ஆனால் இந்த ஆய்வகத்தால் மேற்கு தொடர்ச்சி மலையின் சுற்றுச்சூழலும், பல்லுயிர் பெருக்க இடங்களும் அழியும் என்று இயற்கை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து மாநில சுற்றுச்சூழல் தாக்கத்தின் மதிப்பீட்டு ஆணையம் இந்த திட்டத்துக்கு அனுமதி மறுத்தது.
இந்நிலையில் டாட்டா நிறுவனம் சார்பில் மத்திய அரசிடம் புதிதாக ஒரு மனு ஜனவரி மாதம் சமர்ப்பிக்கப்பட்டது. இதை ஆய்வு செய்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், தமிழக அரசிடம் ஆலோசனை கேட்காமலேயே ஆய்வக பணிகளை தொடரலாம் என அனுமதி வழங்கியது.

இதை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘‘நியூட்ரினோ ஆய்வு மையத்துக்கு சுற்றுச்சூழல் துறை வழங்கிய அனுமதியை ரத்து செய்யவேண்டும் என்றும், பொதுமக்களிடம் கருத்து கேட்ட பிறகுதான் ஆய்வகத்துக்கு அனுமதி கொடுப்பது தொடர்பாக முடிவெடுக்க வேண்டும்’’ என்றும் வலியுறுத்தப்பட்டது. மேலும் சட்ட விதிகளுக்கு புறம்பாக நியூட்ரினோ ஆய்வு மையத்துக்கு அனுமதி வழங்கிய சுற்றுச்சூழல் அமைச்சக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் விசாரணை நீதிபதிகள் ரகுவேந்திர எஸ்.ரத்தோர், சத்தியவான் சிங் கர்ப்யால் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

விசாரணை தொடங்கியதும் மத்திய அரசு தரப்பில், ‘‘ஏற்கனவே மனுதாரர்கள் தரப்பில் சுற்றுச்சூழல் அனுமதியை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. தற்போது இரண்டாவது முறையாக தடையில்லா சான்றிதழ் அனுமதி பெறப்பட்டுள்ளது. எனவே இந்த விவகாரத்தில் எந்த விதிமீறலும் நடைபெறவில்லை. ராணுவ ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் மற்றும் நிபுணர்கள் உரிய ஆய்வுகள் மேற்கொண்டு இந்த திட்டத்தை நிறைவேற்றலாம் என அறிக்கை அளித்துள்ளனர். ஆனாலும் நியூட்ரினோ திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்று வேண்டுமென்றே திட்டமிட்டு சிலர் பிரச்சினைகளை கிளப்பி வருகின்றனர்’’ என்று கூறப்பட்டது.
மனுதாரர் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில், ‘‘நியூட்ரினோ ஆய்வு மையத்துக்கு அனுமதி அளித்ததில் பல விதிமீறல்கள் உள்ளன. அப்பகுதி மக்களிடம் எவ்வித கருத்து கேட்பும் நடத்தவில்லை. இந்த திட்டத்தால் என்னென்ன சுற்றுச்சூழல் மாற்றம் நிகழும் என்பது தொடர்பாக அவர்களது அறிக்கையில் எந்த விவரமும் தெரிவிக்கப்படவில்லை’’ என வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

தமிழக அரசு தரப்பில், ‘‘இந்த திட்டத்துக்கு மாநில அரசு அனுமதி வழங்கவில்லை. தேசிய அளவிலான முக்கியத்துவம் வாய்ந்த திட்டம் என்று கூறி மத்திய அரசு அனுமதி வழங்கியது. எனவே கருத்துகேட்பு கூட்டத்தை மாநில அரசு நடத்த முடியாது’’ என்று வாதிடப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இந்த விவகாரத்தில் 2017–ம் ஆண்டில் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தொடர்பாக மத்திய அரசு நாளை (இன்று) விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை இன்று (வியாழக்கிழமை) ஒத்திவைத்தனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.