‘வீரமாதேவி’ படத்தில் நடிக்கும் சன்னிலியோனுக்கு வலுக்கும் எதிர்ப்புகள்
இந்தி நடிகைகள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். சன்னிலியோனை நாடு கடத்த வேண்டும் என்று அங்குள்ள கவர்ச்சி நடிகைகள் போர்க்கொடி உயர்த்தினார்கள்.
சில இந்தி படங்களில் அவர் கவர்ச்சியாக நடித்துள்ள பேனர்களை மும்பை வீதிகளில் வைத்ததற்கு எதிர்ப்பு கிளம்பி போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது. பெங்களூருவில் ஒரு ஓட்டலில் நடந்த நடன நிகழ்ச்சியில் சன்னிலியோன் நடனம் ஆட எதிர்ப்பு கிளம்பியதால் அதற்கும் போலீசார் தடை விதித்தனர்.
இப்போது ஆபாச நடிகை என்ற இமேஜை அகற்ற தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் தயாராகும் வீரமாதேவி என்ற சரித்திர படத்தில் ராணியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் அவர் நடிக்கக்கூடாது என்று ஏற்கனவே சில இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இப்போது கர்நாடகாவிலும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
சன்னிலியோன் நடிக்கும் வீரமாதேவி படத்தை கர்நாடகாவில் திரையிடக் கூடாது என்று அங்குள்ள கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பினர் கண்டித்துள்ளனர். இதனால் அங்கு படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. தற்போது வீரமாதேவி பட வேலைகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. இன்னும் ஓரிரு மாதங்களில் படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ள நிலையில் சன்னிலியோனுக்கு வலுக்கும் எதிர்ப்புகளால் படக்குழுவினர் தவிப்பில் உள்ளனர்.