அ.தி.மு.க.வை பிளவுபடுத்த நினைக்கிறார் டி.டி.வி.தினகரன் மீது ஓ.பன்னீர்செல்வம் பாய்ச்சல்
ஆட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தி, அ.தி.மு.க.வை பிளவுபடுத்த டி.டி.வி.தினகரன் நினைக்கிறார். அணிகள் இணைப்புக்கு முன்பு தான் அவரை சந்தித்தேன். இப்போது அவரது குற்றச்சாட்டு பொய்யானது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
சென்னையில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க.விலும், ஆட்சியிலும் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டு டி.டி.வி.தினகரன் இன்றைக்கு ஒரு புது பிரச்சினையை தாமாகவே சிந்தித்து, பேசியிருக்கிறார். தங்கதமிழ்செல்வனை முதலில் பேட்டி கொடுக்க செய்துவிட்டு, இப்போது அவர் பேசியிருக்கிறார்.
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலையொட்டி, மதுரையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் ஒரு மிகப்பெரிய எழுச்சி இருந்தது. அ.தி.மு.க. மீது தொண்டர்கள் எவ்வளவு பற்றும், பாசமும் வைத்து இருக்கிறார்கள் என்பது அந்த கூட்டத்தில் தெரிந்தது. இதைப் பார்த்ததும் டி.டி.வி.தினகரன் ஒரு குழப்பமான மனநிலைக்கு வந்திருக்கிறார். ஒரு வாரத்திற்கு முன்பு பெரியகுளம் எம்.எல்.ஏ. கதிர்காமு, டி.டி.வி.தினகரனை அழைத்து சமுதாய விழா நடத்தினார். அதில் டி.டி.வி.தினகரன் பேசும்போது, கதிர்காமுவை ரூ.50 கோடி தருகிறேன் என்று நாங்கள் அழைத்ததாக பொய்யாக கூறியிருக்கிறார். கதிர்காமு யாரால் வெற்றி பெற்றார் என்பது எல்லோருக்கும் தெரியும்.
அந்த கூட்டத்தில், பா.ஜ.க.வுடன் சேர்ந்து நான் தமிழக அரசை கலைத்துவிட்டு முதல்-அமைச்சராக வர ஆசைப்படுகிறேன் என்ற உண்மைக்கு மாறான குற்றச்சாட்டை கூறி, சேற்றை வாரி என் மேல் வீசியிருக்கிறார். அவர் குழப்பத்தில் இருப்பதால் இதுபோன்று பிதற்றி வருகிறார். மதுரையில் நடந்த கூட்டத்தில் நான் பேசும்போது, டி.டி.வி.தினகரன் நடவடிக்கை குறித்து குறிப்பிட்டேன்.
கட்சிக்கும், ஆட்சிக்கும் விசுவாசமாக இருக்க வேண்டும் என்று தான் என் அரசியல் பயணத்தை நடத்தி வந்திருக்கிறேன். ஜெயலலிதா இறந்தபிறகு 3 மாதம் முதல்-அமைச்சராக இருந்து இருக்கிறேன். சசிகலா முதல்-அமைச்சராக முயற்சி மேற்கொண்டு இருக்கிறார் என்று என்னிடமே சிலர் சொன்னார்கள். அவருக்கு நல்ல பல அறிவுரைகளை கூறினேன்.
தர்மயுத்தத்தை தொடங்கிய நேரத்தில், எனக்கு பொது மக்கள் மிகப்பெரிய அங்கீகாரம் அளித்தனர். நான் எதற்காக தர்மயுத்தம் நடத்தினேன், அந்த குடும்பத்தில் கட்சியும், ஆட்சியும் சென்றுவிடக்கூடாது என்பதற்காக தான். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், டி.டி.வி.தினகரனுக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு, தினகரன் இல்லத்தில் பலத்த வாக்குவாதம் ஏற்பட்டு, இனிமேல் இந்த குடும்பத்தில் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்று அமைச்சர்கள் வெளியே வந்தனர். அதன்பின்னர் இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று விரக்தியின் உச்சத்திற்கே சென்று, இந்த ஆட்சியை கவிழ்க்க டி.டி.வி.தினகரன் முயற்சி செய்தார்.
அப்போது தனக்கு 44 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள் என்று சொல்லி, ஒரு நாள் தன் வீட்டுக்கு எம்.எல்.ஏ.க்களை வரவழைத்து, அதில் 36 எம்.எல்.ஏ.க்களை அவராக படம்பிடித்து பத்திரிகைகளுக்கு கொடுத்தார். நிலைமை மோசமாக சென்றுகொண்டிருந்தது. இது எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாகப் போனால், எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் கட்டிக்காத்த கட்சியும், ஆட்சியும் பாழ்பட்டுவிடுமே என்ற மன உளைச்சலில் நான் இருந்தேன். அப்போதுகூட என்னால் இந்த ஆட்சி கவிழாது என்று கூறியிருக்கிறேன்.
அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோர் என்னை பார்க்க வந்தார்கள். அவர்கள் என்னிடம், கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்ற வேண்டும். டி.டி.வி.தினகரனால் ஆட்சி கவிழ்ந்தது என்ற நிலை வந்துவிடக்கூடாது என்று தெரிவித்தனர். நாம் ஒன்றாக இணைந்து இந்த கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்ற வேண்டும் என்று உறுதி எடுத்தோம். அப்போது அவர்களிடம் நான் 3 முறை முதல்-அமைச்சர் பதவியில் இருந்துவிட்டேன். எனவே கட்சி பணியை மட்டும் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறினேன். பாண்டியராஜனுக்கு மட்டும் அமைச்சர் பதவி கொடுங்கள். அவர் பதவியைவிட்டு விலகி என்னிடம் வந்தவர் என்றேன். அவர்கள் இல்லை, இல்லை நீங்கள் ஆட்சியில் பங்குபெற வேண்டும் என்றனர். எனக்கு கட்சி பணி தான் முக்கியமாக இருந்தது.
இன்றளவும் தான் நினைத்த காரியம் நடக்கவில்லை என்ற காரணத்தில், அவர் அலைந்து திரிந்து கொண்டிருக்கிறார். ஆர்.கே.நகரில் தில்லுமுல்லு செய்து, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வெற்றி பெற்றதுபோல், திருப்பரங்குன்றத்தில் அவரால் வெற்றிபெற முடியாது. 20 ரூபாய் நோட்டை பார்த்தாலே பெட்டிக்கடைக் காரர்கள் செல்லாது என்று திருப்பி அனுப்புகிறார்கள்.
ஆரம்பத்தில் அவருக்கு 36 எம்.எல்.ஏ.க்கள் என்றிருந்த எண்ணிக்கை 18 ஆக குறைந்தது. தரக்குறைவான அரசியலை தினகரன் செய்கிறார். தினகரனும், நீங்களும் சந்தித்தீர்களா? என்பது தான் உங்கள் கேள்வியாக இருக்கும். நான் தர்மயுத்தம் நடத்திக்கொண்டிருந்தபோது, என்னை சந்தித்து பேச வேண்டும் என்று அவருக்கும், எனக்கும் தெரிந்த நண்பர் மூலமாக கூறினார். அந்த நண்பர் வீட்டில் நாங்கள் சந்தித்தோம்.
அ.தி.மு.க.வில் நாங்கள் ஆகஸ்டு மாதம் இணைந்தோம். அதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாக ஜூலை 12-ந் தேதி தினகரன் தரப்பு அழைப்பு விடுத்ததால், மனம் திருந்திதான் மனம்விட்டு பேச வருகிறார் என்று நினைத்து அவரை சந்தித்தேன். ஆட்சியை கலைக்க வேண்டும் என்ற அவரின் எண்ணத்தை மாற்றவே இந்த சந்திப்பு நடந்தது. ஆனால் பேட்டியில் அவர் என்ன சொன்னாரோ? அதை தான் அங்கு பேசினார். தான் முதல்-அமைச்சராக வரவேண்டும் என்று அவர் விரும்பினார். எனக்கு அதில் உடன்பாடு இல்லை. அரசியல் நாகரிகம் கருதி இன்று வரை நான் இதை சொல்லவில்லை.
அ.தி.மு.க.வுக்குள் குழப்பத்தை ஏற்படுத்த சொல்லியிருக்கிறார். எனக்கு பதவி ஆசை கிடையாது. அவருக்கம், எனக்கும் நண்பரானவர் இன்றைக்கு என்னிடம் மன்னிப்பு கேட்டார். சின்னத்தனமான அரசியலை டி.டி.வி.தினகரன் செய்கிறார். நான் பொய்யான தகவலை சொல்லவில்லை. அ.தி.மு.க.வில் நாங்கள் இணைந்த பிறகு, அவர்களுடன் எந்தவிதமான ஒட்டும் இல்லை, உறவும் இல்லை. எனக்கு இருக்கும் நல்ல பெயரை கெடுக்க அவர்கள் சதி செய்கிறார்கள்.
நான் துணை முதல்-அமைச்சராக இருக்கிறேன். நான் எதற்கு ஆட்சியை கவிழ்க்க வேண்டும். 3 முறை முதல்-அமைச்சராக இருந்து இருக்கிறேன். அந்த ஈனத்தனமான வேலையை நான் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. பழைய நிலைமையிலேயே அவர்கள் வந்தார்கள். ஆட்சியையும், கட்சியையும் கைப்பற்றவே வந்தார்கள். எந்த காலத்திலும் அவரால் கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்ற முடியாது.
ஆட்சியில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி, அ.தி.மு.க.வை பிளவுபடுத்த வேண்டும் என்றும், ஆட்சிக்கு தர்மசங்கடமான சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்றும் அவர் நினைக்கிறார். குறுக்குவழியில் முதல்- அமைச்சராக வேண்டும் என்ற ஆசை எனக்கு இல்லை. ஆட்சி நடைமுறையில் எடப்பாடி பழனிசாமி எல்லோருடனும் கலந்து பேசுகிறார். கட்சியில் நானும், அவரும் பேசுகிறோம். நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம். பதர்கள் காற்றில் பறக்கத்தான் செய்யும், நல்ல நெல்மணிகள் எங்களுடன் இருக்கிறது.
ஜெயலலிதாவால் நீக்கப்பட்டவர் டி.டி.வி.தினகரன். கடைசி வரை அவரை கட்சியில் ஜெயலலிதா சேர்க்கவே இல்லை. அரசியல் நாகரிகம் தெரியாத, அநாகரிகத்திற்கு சொந்தமானவர் டி.டி.வி.தினகரன். வாழ்க்கை முழுவதும் மாறுபட்ட கருத்தை தான் அவர் கூறி வருகிறார். என்னைப் பற்றி என்ன ரகசியம் என்றாலும் அவர் வெளியிடட்டும், அதற்கு தக்க பதில் என்னிடம் இருக்கிறது.
75 நாட்கள் ஆஸ்பத்திரியில் ஜெயலலிதா இருந்தபோது, நாங்கள் எல்லாம் வருத்தத்துடன் கடவுளை வேண்டிக்கொண்டு தாடியுடன் இருந்தோம். அவர் எங்கு இருந்தார். அவர் ஆஸ்பத்திரிக்கு வரவே இல்லை. ஜெயலலிதா பெயரை சொல்லக்கூட அவருக்கு அருகதை இல்லை. ஜெயலலிதா பெயரில் கட்சி நடத்த அவருக்கு என்ன தகுதி இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது அமைச்சர்கள் ஆர்.பி.உதயக்குமார், கே.பாண்டியராஜன், அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன் ஆகியோர் உடன் இருந்தனர்.