ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி வெற்றி கணக்கை தொடங்குமா?
10 அணிகள் இடையிலான 5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று (சனிக்கிழமை) இரவு நடக்கும் 8-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி, எப்.சி.கோவா அணியை எதிர்கொள்கிறது. மெய்ல்சன் ஆல்வ்ஸ் தலைமையிலான சென்னை அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் 0-1 என்ற கோல் கணக்கில் பெங்களூரு அணியிடம் தோல்வியை தழுவியது. மந்தர் ராவ் தேசாய் தலைமையிலான கோவா அணி தனது முதலாவது ஆட்டத்தில் கவுகாத்தியுடன் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா கண்டது.
இந்த சீசனின் முதல் வெற்றியை ருசிக்க இரண்டு அணிகளும் வரிந்து கட்டுவதால் இந்த ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம். உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு சென்னை அணிக்கு பலம் சேர்க்கும். சென்னை அணியின் பயிற்சியாளர் ஜான் கிரிகோரி கூறுகையில், ‘பெங்களூருவுக்கு எதிராக எங்கள் அணி சிறப்பாக தான் செயல்பட்டது. இருப்பினும் நாங்கள் கோல் அடிக்க கிடைத்த வாய்ப்புகளை சரியாக முழுமை செய்யவில்லை. அந்த தவறை வரும் ஆட்டங்களில் சரி செய்வோம். சிறிய வாய்ப்பு கிடைத்தாலும் அதனை கோலாக மாற்றுவதில் கோவா அணியினர் சிறந்தவர்கள். எனவே தடுப்பு ஆட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமானதாகும்’ என்றார்.
இவ்விரு அணிகளும் இதுவரை 9 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 5-ல் சென்னையும், 3-ல் கோவாவும் வெற்றி பெற்றன. ஒரு ஆட்டம் டிராவில் முடிந்தது. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.