‘ஓ.பன்னீர்செல்வம் என்னை சந்திக்க நண்பர் மூலம் அணுகினார்’ டி.டி.வி.தினகரன் பேட்டி
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனை சந்தித்ததாக, டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் என்னை சந்தித்தது உண்மை என்றும், கடந்த செப்டம்பர் மாதம் கடைசி வாரத்தில் மீண்டும் என்னை சந்திக்க அணுகினார் என்றும் டி.டி.வி.தினகரன் நேற்று தெரிவித்தார்.
இது குறித்து சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில், டி.டி.வி.தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த ஆண்டு திகாரில் இருந்து ஜூன் 3-ந் தேதி வந்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் என்னை பார்க்க வேண்டும் என்று அவருக்கும், எனக்கும் நெருங்கிய நண்பர் மூலம் சொல்லி அனுப்பி இருந்தார். இது குறித்து எனது கட்சியின் தலைமைக்கழக நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசித்துவிட்டு, ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்தேன்.
அப்போது அவர், நான் (ஓ.பன்னீர்செல்வம்) தவறு செய்துவிட்டேன், அவசரப்பட்டுவிட்டேன், பேசியது எல்லாம் தவறு. கூட இருக்கிற எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகளிடம் பேசிவிட்டு உங்களோடு வந்து சேர்ந்து கொள்கிறோம். எடப்பாடி பழனிசாமியை எதிர்ப்பதற்கு உங்களோடு வந்து இணைந்து கொள்கிறேன் என்று கடந்த ஆண்டு ஜூலை 2-வது வாரத்தில் என்னிடம் கூறினார்.
நான் அவரை சந்தித்ததை அப்போதே மறந்துவிட்டேன்.
இந்த நிலையில், 1½ ஆண்டுகளுக்கு பிறகு அதே நண்பர் மூலம் செப்டம்பர் கடைசி வாரத்தில் மீண்டும் என்னை பார்க்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் சொல்லி அனுப்பி இருந்தார். எடப்பாடி பழனிசாமியை பதவியில் இருந்து இறக்குவதற்கும், என்னை(டி.டி.வி.தினகரன்) முக்கியமான பதவியில் வைப்பதற்கும் தயாராகிவிட்டேன் என்று சொல்லி அனுப்பி இருந்தார். அதற்கு நான் அந்த நண்பரிடம், இந்த வேலையெல்லாம் வேண்டாம். ஓ.பன்னீர்செல்வமும் நானும் விலகி எவ்வளவோ தூரம் சென்று விட்டோம் என்று கூறிவிட்டேன்.
ஒருபக்கம் குடும்ப அரசியல் செய்கிறார்கள், அவரிடம் மிரட்டி கையெழுத்து வாங்கினார்கள் என்று கூறிவிட்டு என்னை சந்திக்க விரும்புவதாக கூறுவதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். உலகத்துக்கு புரிய வைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த பத்திரிகையாளர் சந்திப்பு.
அவரது (ஓ.பன்னீர்செல்வத்தின்) மகன், தம்பி மற்றும் உறவினர்களும் பன்னீர்செல்வத்துடன் நான் சந்திக்க வேண்டும் என்று என்னை அணுகினர்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதைத் தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி: அமைச்சர் தங்கமணி நாமக்கல்லில் பேட்டி கொடுக்கும் போது, கட்சி பதவிகள் வேண்டாம். ஆனால், கட்சியை இணைக்க வேண்டும் என்று நீங்கள் தூதுவிட்டதற்கான ஆதாரங்களை வெளியிடத் தயார் என்று கூறியிருக்கிறாரே?
பதில்: தங்கமணியிடம் நான் தூதுவிட்டதற்கு ஆதாரம் இருந்தால் வெளியிடச் சொல்லுங்கள். இது தென்னை மரத்தில் தேள் கொட்டினால், பனைமரத்தில் நெறிக்கட்டுவது போன்று உள்ளது. ஓ.பன்னீர்செல்வம் பதில் சொல்லட்டும். இவர்(தங்கமணி) எதற்கு பதில் சொல்கிறார்.
இன்னொரு விஷயம் அவரை (தங்கமணியை) பற்றி சொல்கிறேன். கடந்த மார்ச் 15 நாங்கள் கட்சி ஆரம்பித்தோம். மார்ச் 16-ந் தேதி டெல்லியில் போய் ஒப்புகை சீட்டு வாங்கி வரும்போது, விமானத்தில், தங்கமணியின் நண்பர் ஒருவர் என்னிடம் வந்து தங்கமணியை முதல்வராக்கினால் என்ன? என்று பேசினார்
கூவத்தூரில் எடப்பாடி பழனிசாமியை தேர்ந்தெடுத்தபோது, தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, வீரமணி போன்றவர்கள் 10 எம்.எல்.ஏ.க்களுடன் ஓ.பன்னீர்செல்வத்திடம் போக இருந்ததை நான் தடுத்து நிறுத்தினேன்.
கேள்வி: ஓ.பன்னீர்செல்வத்துடனான சந்திப்பின் போது, தர்மயுத்தம் குறித்து வருத்தம் தெரிவித்தாரா?
பதில்: அவர் தான் நடந்து கொண்டது தவறு என்று என்னிடம் கூறி மன்னிப்பு கேட்டார்.
கேள்வி: ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியுடன் இணைவது குறித்த உங்கள் நிலைப்பாடு என்ன?
பதில்: உண்மையில், அங்கிருந்து தொண்டர்கள் வந்து என்னிடம் இணையலாமே தவிர, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி போன்ற ஒரு பத்து பேருடன் நாங்கள் இணைவதற்கான வாய்ப்பே கிடையாது. இவர்களுடன் சென்று இணைவது என்ற வார்த்தையே தற்கொலைக்கு சமம்.
கேள்வி: துணை முதல்-அமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு முதல்-அமைச்சர் ஆசை வந்துவிட்டதாக கருதுகிறீர்களா?
பதில்: சசிகலாவின் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி நீங்கள் தான் பொதுச்செயலாளராக வேண்டும். முதல்-அமைச்சராக வேண்டும் என்று முன்மொழிந்தவர் 2 நாட்களுக்கு பிறகு என்னை மிரட்டினார்கள் என்று கூறி தியானத்துக்கு போனது, தர்மயுத்தம் நடத்தியது, கட்சியை உடைத்தது எல்லாம் முதல்-அமைச்சர் ஆசையில் தான்.
கேள்வி: ஓ.பன்னீர்செல்வத்துடனான சந்திப்பு எங்கே நடைபெற்றது?
பதில்: ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டிலும் இல்லை. என் வீட்டிலும் இல்லை. வெளியில் நண்பர் ஒருவர் வீட்டில் நடைபெற்றது.
கேள்வி: எடப்பாடி பழனிசாமியை பதவியில் இருந்து இறக்குவதற்காக உங்களை சந்திக்க ஓ.பன்னீர்செல்வம் வாய்ப்பு கேட்டதாக கூறினீர்கள். இனிமேல் அவர்கள் இருவருக்குமான உறவு எப்படி இருக்கும்?
பதில்: ஏற்கனவே இரண்டுபேரும் கைகோர்த்துக் கொண்டு ஒன்றாக இருப்பது போன்று கூறுகிறீர்கள். இரண்டு பேரும் கையில் கத்தியை மறைத்து வைத்துக்கொண்டு இருப்பது ஊருக்கே தெரிந்த விஷயம்.
கேள்வி: இந்த ஆட்சி எவ்வளவு காலம் நீடிக்கும்?
பதில்: 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கின் தீர்ப்பு வந்ததும், ஓட்டெடுப்பு வரும் வரை நீடிக்கும்.
கேள்வி: நாடாளுமன்ற தேர்தலும், சட்டமன்ற தேர்தலும் ஒரே நேரத்தில் வர வாய்ப்பு இருக்கிறதா?
பதில்: வரவேண்டும் என்பது தமிழக மக்களின் எண்ணம்.
கேள்வி: நீங்கள் எம்.எல்.ஏ.வாக இல்லாததால் வேறு நபரிடம் முதல்-அமைச்சர் பதவியை கொடுத்தீர்கள். இப்போது நீங்கள் எம்.எல்.ஏ.வாக இருக்கிறீர்கள். அடுத்து என்ன செய்வீர்கள்?
பதில்: என்னுடைய தனிப்பட்ட விருப்பம் என்பது, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் குக்கர் சின்னத்தில் பொதுத்தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெற்று தமிழக மக்களின் ஆதரவோடு, எங்கள் எம்.எல்.ஏ.க்கள், பொதுச்செயலாளர் விருப்பத்துடன் அந்த பதவி வந்தால் தான் தமிழக மக்களுக்காக செயல்பட முடியும். அதை விடுத்து குறுக்கு வழியில் பதவியில் போய் இருக்க வேண்டும் என்ற எண்ணம் கிடையாது.
கேள்வி: ஓ.பன்னீர்செல்வம், தங்கமணி தவிர வேறு அமைச்சர்கள் உங்களை சந்திக்க அணுகியிருக்கிறார்களா?
கேள்வி: ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் கத்தியை வைத்துக் கொண்டு இருப்பதாக கூறினீர்கள். ஆனால், அவர்கள் இருவரும் இரட்டைக்குழல் துப்பாக்கி என்று அமைச்சர்கள் கூறுகின்றனரே?
பதில்: இரட்டைக்குழல் துப்பாக்கிதான். ஆனால், 500 ஆண்டுகளுக்கு முன் உள்ள துப்பாக்கி. அதெல்லாம் வெடிக்காது.
இவ்வாறு அவர் பதில் அளித்தார்.