கனமழை எதிரொலி: கேரளாவில் 11 அணைகள் திறப்பு
கேரளாவில் ஆகஸ்டு மாதம் பெய்த கனமழை, மாநிலத்தையே புரட்டி போட்டது. அந்த பாதிப்பில் இருந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில் சில நாட்களாக மீண்டும் கனமழை பெய்து வருகிறது. நாளை மறுநாள் (திங்கட்கிழமை) வரை கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இடுக்கி, மலப்புரம் மாவட்டங்களில் அதிகளவு மழை பெய்து வருவதால் ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கேரள அணைகளில் தண்ணீர் அதிகளவு உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக 11 அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டன. இதனால் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மழை காரணமாக இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறு, குமுளி, தேக்கடி உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா வருபவர்கள் தமிழக– கேரள எல்லை பகுதியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்படுகின்றனர்.
மேலும் இடுக்கி மாவட்டம் முழுவதும் நிவாரண முகாம்கள் தயார் நிலையில் இருக்கின்றன. 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைகளும் செயல்பட தொடங்கின. நிலச்சரிவு ஏற்படும் பகுதிகளில் குடியிருப்போர் பாதுகாப்பு பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கனமழை எச்சரிக்கை உள்ள நிலையில் இடுக்கி அணையை திறக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டத்தை தொடர்ந்து கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.