Breaking News
கவர்னருடன் எடப்பாடி பழனிசாமி திடீர் சந்திப்பு

கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று திடீரென சந்தித்து பேசினார். மிக கனமழையையொட்டி அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி விளக்கினார்.

தமிழக அரசியல் களம் கடந்த 2 நாட்களாக சூடுபிடித்திருக்கிறது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனை துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ரகசியமாக சந்தித்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க திட்டமிட்டதாக பேசப்படுகிறது.
இந்த பரபரப்புக்கு இடையே தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. எனவே, மழையை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும் தமிழக அரசு ஈடு படத் தொடங்கியது.

தலைமைச்செயலகத்தில் நேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கிடையே, எடப்பாடி பழனிசாமியை நேற்று காலை சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சந்தித்து பேசினார். மரியாதை நிமித்தமான சந்திப்பு தான் என்று இதை கூறினாலும், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன் சற்று நேரத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை கிண்டியில் உள்ள ராஜ் பவனில் சென்று சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பிறகுதான் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கவர்னரை திடீரென சந்திக்க இருக்கும் தகவல் வெளியானது. இதில் அரசியல் பின்னணி இருக்கும் என்று கருதப்பட்டது.

இந்த நிலையில், நேற்று இரவு 7.15 மணியளவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை கிண்டியில் உள்ள ராஜ் பவனுக்கு சென்று கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து பேசினார். அவருடன் தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உடன் சென்றார். இந்த சந்திப்பின்போது, தமிழக கவர்னராக பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைவதையொட்டி பன்வாரிலால் புரோகித்துக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார். மேலும் மிக கனமழை எச்சரிக்கையையொட்டி அரசு எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி விளக்கி கூறினார்.

சுமார் ½ மணி நேரம் நடந்த இந்த சந்திப்புக்கு பிறகு இரவு 7.45 மணியளவில் அங்கிருந்து எடப்பாடி பழனிசாமி காரில் புறப்பட்டு சென்றார். கவர்னரை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தபோது, தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.