டெல்லியில் கோ–ஆப்டெக்ஸ் கண்காட்சி-விற்பனை
தசரா மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோ–ஆப்டெக்ஸ் நிறுவனம் சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனையை தொடங்குவது வழக்கம். அதன்படி டெல்லியில் இந்த கண்காட்சி தொடங்கியது.
டெல்லியில் உள்ள வைகை தமிழ்நாடு இல்லத்தில் இந்த கண்காட்சியை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம் குத்துவிளக்கேற்றி நேற்று தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளரும், தமிழ்நாடு இல்ல முதன்மை உறைவிட ஆணையருமான ஜஸ்பீர்சிங் பஜாஜ், மற்றொரு முதன்மை உறைவிட ஆணையர் முருகானந்தம், துணை ஆணையர் சின்னத்துரை, கோஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் எஸ்.என்.ரமேஷ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதுதொடர்பாக கோ–ஆப்டெக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிகையில் ‘ரூ.50 லட்சம் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு கண்காட்சி, வருகிற 28–ந் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணிவரை செயல்படும் என்றும், பட்டுச்சேலை, வேட்டி, சட்டை, போர்வை உள்ளிட்ட அனைத்து ரகங்களுக்கும் 30 சதவீதம் தள்ளுபடி விலையில் வழங்கப்படும் என அதில் அறிவிக்கப்பட்டு உள்ளது.