திராவகம் வீசப்பட்ட பெண்ணின் கதையில் தீபிகா படுகோனே
டெல்லியில் 2005–ம் ஆண்டு பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த லட்சுமி அகர்வால் என்ற பெண் மீது திராவகம் வீசப்பட்டது இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்துக்கு பிறகு திராவகம் விற்பதை ஒழுங்குபடுத்தியும், அதிக தண்டனையை அறிவித்தும் சுப்ரீம் கோர்ட்டு புதிய தீர்ப்பை வழங்கியது. திராவக தாக்குதலுக்கு உள்ளானபோது லட்சுமி அகர்வாலுக்கு வயது 15. அவரை ஒரு வாலிபர் பின்தொடர்ந்து திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தினான். அதை ஏற்காததால் ஆத்திரம் அடைந்து லட்சுமி முகத்தில் அந்த வாலிபர் திராவகத்தை வீசினான். இதில் லட்சுமி முகம் வெந்து ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று உயிர்பிழைத்தார்.
தற்போது புதிய அறக்கட்டளை தொடங்கி திராவக வீச்சில் பாதித்தோருக்காக லட்சுமி குரல் கொடுத்து வருகிறார். டி.வி. நிகழ்ச்சிகளையும் நடத்துகிறார். லட்சுமியின் வாழ்க்கை சினிமா படமாகிறது. இந்த படத்தை மேக்னா குல்சார் இயக்குகிறார். இதில் லட்சுமி அகர்வாலாக தீபிகா படுகோனே நடிக்கிறார். இந்த படத்தில் நடிப்பது குறித்து தீபிகா படுகோனே கூறும்போது, ‘‘லட்சுமி கதையை கேட்டதும் மனது பாதித்தது. இந்த படம் பெண்களுக்கு எதிரான வன்முறையை சித்தரிப்பது மட்டுமின்றி பெண்களின் கருணை, பலம், நம்பிக்கை, வெற்றி உள்ளிட்ட விஷயங்களையும் மையப்படுத்துவதாக இருக்கும். இந்த படத்தை நானே தயாரிக்கிறேன்’’ என்றார்.