Breaking News
திலீப் விவகாரத்தில் நடிகைகள் மீண்டும் போர்க்கொடி

கேரளாவில் கடந்த ஆண்டு நடிகையை காரில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பிரபல மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் அவரை கேரள நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கினர். 87 நாட்கள் சிறையில் இருந்துவிட்டு திலீப் ஜாமீனில் வெளியே வந்து இருக்கிறார்.

இந்த நிலையில் மலையாள நடிகர் சங்கத்துக்கு புதிய தலைவராக பொறுப்பு ஏற்ற மோகன்லால் பொதுக்குழுவை கூட்டி மீண்டும் திலீப்பை சேர்ப்பதாக தீர்மானம் நிறைவேற்றி அவரை சங்கத்தில் சேர்த்துவிட்டார். இதற்கு நடிகைகள் எதிர்ப்பு தெரிவித்தனர். சில நடிகைகள் நடிகர் சங்க உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தனர்.
ரேவதி, பார்வதி, ரீமா கல்லிங்கல், பத்மபிரியா உள்ளிட்ட திரைப்பட பெண்கள் கூட்டமைப்பை சேர்ந்த நடிகைகளும் திலீப்பை சங்கத்தில் சேர்த்ததற்கு கண்டனம் தெரிவித்தனர். எதிர்ப்பு வலுத்ததால் திலீப் நிரபராதி என்று நிரூபித்து விட்டு சங்கத்தில் சேர்கிறேன் என்று அறிவித்தார். மலையாள நடிகர் சங்கமும் திலீப்பை சேர்ப்பதை நிறுத்தி வைத்தது.

திலீப்பை சங்கத்தில் சேர்க்க தீர்மானம் நிறைவேற்றியதற்கு விளக்கம் அளிக்கும்படி ரேவதி, பத்மபிரியா, ரீமா கல்லிங்கல் ஆகியோர் நடிகர் சங்கத்துக்கு கடிதம் அனுப்பினர். அதற்கு இரண்டு மாதமாகியும் பதில் வரவில்லை என்று நடிகைகள் கண்டித்து உள்ளனர். இதுகுறித்து ரேவதி கூறும்போது, ‘‘நடிகர் சங்கத்தில் திலீப் இருக்கிறாரா? இல்லையா? என்பதை சங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என்று விளக்கம் கேட்டோம். ஆனால் இதுவரை பதில் இல்லை. பாலியல் விவகாரங்களில் ஈடுபடும் சங்க உறுப்பினர்களின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களை நிரந்தரமாக நீக்க சங்க விதியில் திருத்தம் கொண்டு வரும்படி கோரினோம். அதற்கும் இதுவரை பதில் இல்லை’’ என்றார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.