தொடர்ந்து 3-வது ஆண்டாக டெஸ்டில் ஆயிரம் ரன்கள் – கோலி சாதனை
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் 139 ரன்கள் எடுத்து, தனது 24-வது சதத்தை எட்டிய இந்திய கேப்டன் விராட் கோலி பல்வேறு சாதனைகளை தன்வசப்படுத்தினார். அதன் விவரம் வருமாறு:-
* இந்திய வீரர்களில் டெஸ்டில் அதிக சதங்கள் எடுத்தவர்களின் பட்டியலில் 4-வது இடத்தில் இருந்த ஷேவாக்கை (23 சதம்) கோலி பின்னுக்கு தள்ளியுள்ளார்.
72-வது டெஸ்டில் விளையாடும் விராட் கோலி 123 இன்னிங்சில் பேட்டிங் செய்து 24 சதங்களை அடித்துள்ளார். இதன் மூலம் 24 சதங்களை அதிவேகமாக எட்டிய 2-வது வீரர் என்ற சிறப்பை அவர் பெற்றார். ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான்பிராட்மேன் 66 இன்னிங்சில் இந்த இலக்கை எட்டியதே சாதனையாக நீடிக்கிறது. இந்தியாவின் சச்சின் தெண்டுல்கர் தனது 24-வது சதத்தை 125-வது இன்னிங்சில் அடித்திருந்தார். அவரை இப்போது கோலி முந்திவிட்டார்.
* விராட் கோலி இந்த ஆண்டில் இதுவரை 4 சதம், 4 அரைசதங்கள் உள்பட 1,018 ரன்கள் (9 டெஸ்ட்) சேர்த்துள்ளார். இந்த ஆண்டில் ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் கோலி தான். அவருக்கு அடுத்த இடத்தில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் (10 டெஸ்டில் 719 ரன்) இருக்கிறார்.
* 29 வயதான விராட் கோலி தொடர்ந்து 3 ஆண்டுகளாக ஒவ்வொரு சீசனிலும் டெஸ்டில் ஆயிரம் ரன்களை கடந்து பிரமாதப்படுத்தியுள்ளார். ஏற்கனவே 2016-ம் ஆண்டில் 1,215 ரன்களும், 2017-ம் ஆண்டில் 1,059 ரன்களும் எடுத்துள்ளார். இதன் மூலம் தொடர்ச்சியாக 3 ஆண்டுகளில் ஆயிரம் ரன்களை கடந்த முதல் இந்தியர், ஒட்டுமொத்த அளவில் 6-வது வீரர் என்ற மகிமையை பெற்றார். இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹைடன் (தொடர்ந்து 5 ஆண்டு), ஸ்டீவன் சுமித் (4 ஆண்டு), வெஸ்ட் இண்டீசின் பிரையன் லாரா, இங்கிலாந்தின் டிரஸ்கோதிக், கெவின் பீட்டர்சன்(தலா 3 ஆண்டு) ஆகியோர் இச்சாதனையை செய்திருக்கிறார்கள்.