12 அணிகள் பங்கேற்கும் புரோ கபடி லீக் போட்டி: சென்னையில் நாளை தொடக்கம்
6-வது புரோ கபடி லீக் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் 12 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் புனேரி பால்டன், அரியானா ஸ்டீலர்ஸ், மும்பை, தபாங் டெல்லி, குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் தமிழ் தலைவாஸ், உ.பி.யோத்தா, நடப்பு சாம்பியன் பாட்னா பைரட்ஸ், தெலுங்கு டைட்டன்ஸ், பெங்களூரு புல்ஸ், பெங்கால் வாரியர்ஸ் ஆகிய அணிகளும் இடம் பிடித்துள்ளன.
இந்த போட்டி தொடரின் லீக் ஆட்டங்கள் சென்னை, சோனிபட், புனே, பாட்னா, நொய்டா, மும்பை, ஆமதாபாத், டெல்லி, ஐதராபாத், ஜெய்ப்பூர், கொல்கத்தா ஆகிய நகரங்களில் அடுத்தடுத்து அரங்கேறுகிறது. பிளே-ஆப் சுற்று ஆட்டங்கள் கொச்சியிலும், இறுதிப்போட்டி மும்பையில் ஜனவரி 5-ந் தேதியும் நடைபெறுகிறது.
இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா 3 முறை மோத வேண்டும். அடுத்து எதிர்பிரிவில் உள்ள அணிகளை ஒரு முறை சந்திக்க வேண்டும். மேலும் எதிர்பிரிவில் உள்ள ஒரு அணியுடன் மட்டும் வைல்டு கார்டு சுற்றில் விளையாட வேண்டும். இதன்படி ஒவ்வொரு அணியும் மொத்தம் 22 லீக் ஆட்டத்தில் விளையாடும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும்.
தொடக்க சுற்று லீக் ஆட்டங்கள் சென்னையில் நாளை முதல் 11-ந் தேதி வரை நடக்கிறது. சென்னையில் நாளை நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் -பாட்னா பைரட்ஸ் (இரவு 8 மணி) அணியும், 2-வது லீக் ஆட்டத்தில் புனேரி பால்டன்-மும்பை (இரவு 9 மணி) அணியும் மோதுகின்றன.
இந்த சீசனுக்கான புரோ கபடி லீக் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கும் வழங்கப்படும் பரிசுக்கோப்பை அறிமுக நிகழ்ச்சி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடந்தது.
விழாவில் கேப்டன்கள் அஜய் தாகூர் (தமிழ் தலைவாஸ்), சுர்ஜீத் சிங் (பெங்கால் வாரியர்ஸ்), ஜோஜிந்தர்சிங் நார்வால் (தபாங் டெல்லி), சுனில் குமார் (குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ்), அனுப்குமார் (ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்), பர்தீப் நார்வால் (பாட்னா பைரட்ஸ்), கிரிஷ் எர்னாக் (புனேரி பால்டன்), விஷால் பரத்வாஜ் (தெலுங்கு டைட்டன்ஸ்), ரிஷாங் தேவதிகா (உ.பி.யோத்தா), சேரலாதன் (மும்பை), ரோகித் குமார் (பெங்களூரு புல்ஸ்) ஆகியோர் கலந்து கொண்டு கோப்பையை அறிமுகப்படுத்தினார்கள். விமானம் தாமதம் காரணமாக அரியானா ஸ்டீலர்ஸ் அணியின் கேப்டன் சுரேந்தர் நாடா மட்டும் விழாவில் கலந்து கொள்ளவில்லை.
விழாவில் கலந்து கொண்ட தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டன் அஜய் தாகூர் அளித்த பேட்டியில், ‘கடந்த சீசனில் எங்கள் அணியில் இளம் மற்றும் அனுபவம் இல்லாத வீரர்கள் அதிக அளவில் இடம் பிடித்து இருந்தனர். ஆடுகளத்தில் நாங்கள் எடுத்த சில முடிவுகள் மோசமானதாக இருந்தது. அதுபோன்ற தவறு மீண்டும் நடக்காது. ஆனால் இந்த ஆண்டு மன்ஜீத் சிலார், ஜஸ்விர்சிங், சுகேஷ் ஹெக்டே போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்கள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இளம் மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் சரியான விகிதத்தில் இடம் பெற்றுள்ளனர். எனவே இந்த முறை நாங்கள் சிறப்பாக செயல்படுவோம்’ என்று நம்பிக்கை தெரிவித்தார்.
பரிசுத்தொகை எவ்வளவு?
இந்த கபடி திருவிழாவுக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.8 கோடியாகும். இதில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.3 கோடி பரிசாக வழங்கப்படும். 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.1.8 கோடியும், 3-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.1.2 கோடியும், 4-வது இடத்தை பெறும் அணிக்கு ரூ.80 லட்சமும் பரிசாக வழங்கப்படும்.