சவுதி அரேபியாவில் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்
குமரி மாவட்டம் மேல்மிடாலம் பகுதியை சேர்ந்தவர் ஸ்மைலின் (வயது 34), மீனவர். இவரும், முட்டம் பகுதியை சேர்ந்த விஜயன் (33), அவருடைய தம்பி விவேக் (27), ராமநாதபுரத்தை சேர்ந்த செழியன் ஆகிய 4 பேரும் சவுதி அரேபியாவில் தரின் என்ற இடத்தில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள்.
சம்பவத்தன்று இவர்கள் விசைப்படகில் கடலில் மீன்பிடிக்க சென்றனர்.
ஆழ்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது, அந்த வழியாக சென்ற ஈரான் கடற்கொள்ளையர்கள் மீனவர்கள் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் ஸ்மைலின், விவேக், செழியன் ஆகிய மூவர் மீதும் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன. உடனே, மீனவர்கள் கரைக்கு திரும்பினர். தொடர்ந்து, காயம் அடைந்த 3 பேரும் சவுதி அரேபியாவில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களில் ஸ்மைலின் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மற்றவர்கள் சிகிச்சைக்கு பின்பு விசாரணை கைதிகளாக அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து மீனவர்களின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தெற்காசிய மீனவர் தோழமை பொதுச்செயலாளர் அருட்பணியாளர் சர்ச்சில், குமரி மாவட்ட கலெக்டருக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அதில், காயம் அடைந்த மீனவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்கவும், பிடித்து வைத்திருப்பவர்களை விரைவில் விடுவித்து சொந்த ஊருக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இதற்கிடையே காயம் அடைந்த மீனவர்களை சொந்த ஊருக்கு அழைத்து வர வெளியுறவுத்துறை மூலம் தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.