பெங்களூருவில் நடிகை சன்னி லியோன் நிகழ்ச்சிக்கு கன்னட அமைப்பு எதிர்ப்பு; உருவ பொம்மை எரிப்பு
நடிகை சன்னி லியோன் கலந்து கொள்ளவுள்ள நிகழ்ச்சிக்கு கன்னட ஆதரவு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தி திரைப்பட நடிகை சன்னி லியோன் பெங்களூரு நகரில் வருகிற நவம்பர் 3ந்தேதி நடைபெற உள்ள நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள இருக்கிறார்.
இந்த நிலையில், கன்னட ரக்சனா வேதிகே யுவ சேனா என்ற அமைப்பினை சேர்ந்தவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது கன்னட கலாசாரத்திற்கு எதிரானது என கூறிய அவர்கள் முன்னாள் பாலியல் திரைப்பட நடிகையான சன்னி லியோனுக்கு எதிராக உருவ பொம்மையையும் எரித்துள்ளனர். இதுபற்றி அந்த அமைப்பின் தலைவர் ஹரீஷ் கூறும்பொழுது, இந்த நிகழ்ச்சிக்கு எதிராக நாங்கள் போராடியுள்ளோம். இது நிகழ்ச்சியை பற்றியது அல்ல. வேறு விசயங்களும் இதில் உள்ளன.
தென்னிந்தியாவின் பெண் போராளி ஒருவரை அடிப்படையாக கொண்டு உருவாகும் படத்தின் நாயகியாக சன்னி லியோன் நடிக்கிறார். ஒவ்வொருவராலும் வணங்க பெறும் பெண் ஒருவரை போன்று நடிப்பதற்கு சன்னி லியோன் போன்றவர்களை எப்படி அனுமதிக்க முடியும்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த வருடம் டிசம்பர் 31ல் புது வருட கொண்டாட்ட நிகழ்ச்சி ஒன்று பெங்களூருவில் நடைபெற இருந்தது. இதில் லியோன் கலந்து கொள்வதற்கு இந்த அமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது. தொடர்ந்து அதிகாரிகள் அனுமதி மறுத்த நிலையில் அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.